இந்தியா

”உண்மையை மறைத்துப் பொய் பேசும் பிரதமர்”.. மோடியின் பேச்சுக்கு மாநில முதல்வர்கள் கடும் கண்டனம்!

மாநில அரசால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது உண்மையில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

”உண்மையை மறைத்துப் பொய் பேசும் பிரதமர்”.. மோடியின் பேச்சுக்கு மாநில முதல்வர்கள் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி வந்ததிலிருந்தே விலைவாசி உயர்வு, வேலையின்மையும் அதிகரித்துள்ளது. மேலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மக்களின் தினசரி வாழ்க்கையே திண்டாட்டமாக மாறியுள்ளது.

இதுபோதாது என்று தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வருகிறது. மேலும் சுங்க கட்டணம், சமையல் எரிவாயு சிலிண்டர் என எதையும் விட்டுவைக்காமல் ஒன்றிய அரசு விலையை உயர்த்தி வருகிறது.

கடந்த ஆண்டு பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்தபோது, விலையைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாட்வரி குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்தது.

தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ரூ.110ஐ கடந்து பல்வேறு மாநிலங்களில் விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு மவுனம் காத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி "மாநில அரசுகள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குறைக்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் குறைக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

"உண்மையை மறைத்து மாநில அரசுகளைப் பிரதமர் மோடி குறை சொல்கிறார்" என மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெட்ரோல்-டீசல் விலை தொடர்பான பிரதமரின் பேச்சு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது" என விமர்சித்துள்ளார். மேலும்"ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பாகவே, பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் குறைத்தது தமிழ்நாடு அரசுதான் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவும் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய முதல்வர் உத்தவ் தாக்ரே, "மாநில அரசால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது உண்மையில்லை.

மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே எரிவாயு மீதான வரியில் விலக்கு அளித்துள்ளது. மேலும் எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மதிப்புக்கூட்டு வரி 13.5%லிருந்து 3% குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இப்படி பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories