இந்தியா

“சிறுபான்மையினர் எதிர்ப்பு நல்லதல்ல; நம்பகத்தன்மை இல்லாத நாடாக இந்தியா மாறும்”: ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

சிறுபான்மையினர் எதிர்ப்பு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதிலும் பெரும் பிரச்சனையாக இருக்கும். இந்தியா உலகளவில் நம்பகத்தன்மையற்ற நாடாகிவிடும் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

“சிறுபான்மையினர் எதிர்ப்பு நல்லதல்ல; நம்பகத்தன்மை இல்லாத நாடாக இந்தியா மாறும்”: ரகுராம் ராஜன் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல் நடந்து வருகிறது. குறிப்பாக, கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்குத் தடை, முஸ்லிம்களின் வாகனங்களில் பயணிக்கத் தடை, முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்கத் தடை என்று துவங்கி, ஒவ்வொரு நாளும் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறை நாட்டில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

ராம நவமி, அனுமன் ஜெயந்தி பெயரில் ம.பி., குஜராத், டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதிகளில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்தப் பின்னணியிலேயே, சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளால் இந்தியப் பொருளாதாரத்திற்கே பாதிப்பு என ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், ‘டைம்ஸ் நெட்வொர்க்’ தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நடத்திய பொருளாதார மாநாட்டில் ‘இந்தியாவின் பொருளாதாரமும், அது எதிர்நோக்கி இருக்கும் சவால்களும்’ என்ற தலைப்பில் விரிவான உரையை ரகுராம் ராஜன் நிகழ்த்தியுள்ளார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

அப்போது அவர் பேசுகையில், “ஒரு ஜனநாயக நாடு அனைத்து தரப்பு குடிமக்களையும் சமமாக, மரியாதையாக நடத்தினால், அது ஏழை நாடாக இருந்தாலும் வெளிநாட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறும். அதன் மூலமாக நமது நாட்டின் சர்வதேச சந்தை விரிவடையும். பொருளாதார சந்தைகளில் மட்டுமல்ல, சர்வதேச உறவுகளும் இதை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக ஒரு நாட்டை மற்ற நாடுகள் தேர்வு செய்வது அந்நாட்டில் சிறுபான்மை சமுதாய மக்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதைப் பொறுத்துதான். ஆனால், சிறுபான்மையினருக்கு எதிரான தற்போதைய முகம், இந்திய பொருட்களின் சந்தையை சுருக்கி விடும். சர்வதேச நாடுகளும் நம்மை நம்பிக்கைக்குரிய நாடாக கருத மாட்டார்கள்.

இந்தியா சிறுபான்மை மக்களுக்கு எதிரானது எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டால் அது இந்திய நிறுவனங்களையும், இந்தியப் பொருட்களுக்கான வெளிநாட்டு சந்தைகளையும் பாதிக்கும். இந்தியா வலிமையான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய நிலையில், நாட்டின் அடிப்படையான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவது இந்தியாவுக்குத்தான் பெரிய இழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories