இந்தியா

’திரையில பார்த்ததுலாம் தரையில நடக்குது’ : யார் இந்த பீகாரின் ’கோதா கேங்’? - திருட்டு கிராமத்தின் பின்னணி!

‘கோதா கேங்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கொள்ளை கும்பல் உத்தர பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களிலேயே பெரும்பாலும் கைவரிசையை காட்டியுள்ளன.

’திரையில பார்த்ததுலாம் தரையில நடக்குது’ : யார் இந்த பீகாரின் ’கோதா கேங்’? - திருட்டு கிராமத்தின் பின்னணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் காட்சிகளை போன்று பீகாரில் உள்ள கிராமத்தினர் திருடுவதையும் கொள்ளையடிப்பதையுமே குலத்தொழிலாக கொண்டு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

இது தொடர்பான ஆங்கில நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-ன் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரங்களை காண்போம்:

பீகாரின் கதிகார் மாவட்டம் கோர்ஹா பகுதியில் உள்ளது ஜீரப்கஞ்ச் என்ற கிராமம். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமமாக இருந்தாலும் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சுமார் 1500 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராம மக்களின் முழுநேர வேலையே திருட்டுத் தொழில்தான். ஜீரப்கஞ்சில் உள்ள சிறுவர்களை பள்ளிப்படிப்புக்கு அனுப்பாமல் எப்படி திருடுவது? திருடும் போது சிக்கிக்கொண்டால் எப்படி தப்பிப்பது? போலிஸாரிடம் சிக்கினால் உண்மையை கக்காமல் இருப்பது எப்படி என்பது போன்று பல வகையில் ஊர் பெரியவர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

முதலில் சிறு சிறு திருட்டு பணிகளான வழிப்பறி, பிக்பாக்கெட், வீடு புகுந்து திருடுவது போன்றவற்றி ஈடுபடுத்தப்பட்டு அதில் வேலையை கச்சிதமாக முடித்துவிட்டால் அவரவர்களின் அனுபவத்துக்கு ஏற்ப திருட்டு பணிகள் கொடுக்கப்படுகின்றன.

அதன்படி வங்கிகள், நகைக்கடைகள் என பெரிய இடங்களில் புகுந்து நகைகள், பணங்களை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தையும் நகையையும் வைத்து அக்கிராம மக்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.

சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றால்கூட ஜீரப்கஞ்ச் பெண்மணிகள் பளபளக்கும் நகைகளை அணிந்தபடியே கட்டுக்கட்டாக பணத்துடனேயே செல்வார்களாம். அண்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு இவர்களது செயல்கள் இருக்குமாம்.

இதுபோக, ஒவ்வொரு முறையும் திருட்டு பணியில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களது குல தெய்வத்தை வணங்கி பூஜை செய்துவிட்டே செல்வார்களாம். அந்த பூஜையின் போது ஏதேனும் தடை ஏற்பட்டால் அப்போது எந்த திருட்டிலும் கொள்ளையிலும் ஈடுபடாபல் விட்டுவிட்டு பிரிதொரு நாளில் செயல்படுத்துவர்களாம்.

மேலும், இந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவனாக ராகேஷ் க்வாலா என்பவர்தான் உள்ளாராம். கிராம மக்கள் எங்கு என்ன கொள்ளை, திருட்டில் ஈடுபட்டாலும் அதில் சில பங்கு ராகேஷுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஒருவேளை போலிஸில் சிக்கிவிட்டால் அவர்களை ஜாமினில் எடுக்க ராகேஷ் அந்த தொகையை பயன்படுத்துவாராம்.

போலிஸாரால் ‘கோதா கேங்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கொள்ளை கும்பல் உத்தர பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களிலேயே பெரும்பாலும் கைவரிசையை காட்டுவார்களாம்.

இது தொடர்பாக பேசியுள்ள கோதா காவல்நிலைய அதிகாரி ரூபக் ரஞ்சன் சிங், கோதா கும்பல் தொடர்பாக பீகார் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடந்த 18 மாதத்தில் மட்டுமே 150 வழக்குகள் வந்துள்ளன. பல பத்தாண்டுகளுக்கு முன்பே ராஜஸ்தானில் இருந்து பீகாருக்கு இடம்பெயர்ந்த இந்த கிச்சாட் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திருட்டுத் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில சி.ஐ.டி. போலிஸார் கூறுகையில் கோதா கும்பல் குறித்த விவரங்களை சேகரித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், சந்தைக்கு கட்டுக்கட்டாக பணத்துடன் மிடுக்காக வரும் பெண்களையும் கண்காணித்து வருவதாவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜீரப்கஞ்சில் உள்ள திருட்டுக் கூட்டத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் சிலர் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வரும் நிகழ்வும் நடந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

Related Stories