இந்தியா

வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன்.. தன் உயிரைக் கொடுத்து இருவரைக் காப்பாற்றிய வீரர் : நடந்தது என்ன?

வெள்ளத்தில் சிக்கிய தந்தை மற்றும் மகனைக் காப்பாற்றிய காவலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன்.. தன் உயிரைக் கொடுத்து இருவரைக் காப்பாற்றிய வீரர் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆந்திராவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத கனமழை பெய்தது.

இதனால் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்த்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெல்லூர் மாவட்டம் தம்மரமடுகு என்ற பகுதியில் தந்தை மற்றும் மகன் ஆகிய இரண்டு பேர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகப் பேரிடர் மீட்புக்குழுவிற்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்தனர். அங்கு மின்கம்பம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு தந்தையும், மகனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனே அவர்களின் அருகே படகு மூலம் சென்றது மீட்புக்குழு.

பிறகு மீட்புக்குழு வீரர் ஸ்ரீநிவாசவராவ் வெள்ளத்தில் இறங்கி அவர்கள் அருகே சென்று பத்திரமாக இருவரையும் படகில் ஏற்றினார். பின்னர் ஸ்ரீனிவாசராவ் படகில் ஏற முயன்றபோது திடீரென அவரது லைஃப் ஜாக்கெட் கழன்றதை அடுத்து அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

உடனே சக வீரர்கள் அவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவரது உடல் சடலமாகத்தான் மீட்கப்பட்டது. தன் உயிரைக் கொடுத்து இரண்டு பேரின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீனிவாசவராவுக்கு சுனிதா என்ற மனைவியும், 18 மாதங்களே ஆன மோக்‌ஷக்னா என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

banner

Related Stories

Related Stories