இந்தியா

Pegasus : ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது - விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி!

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pegasus : ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது - விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் புயலைக் கிளம்பியது.

இதுகுறித்து ஒன்றிய அரசிடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் ஒன்றிய அரசு ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு உரிய பதிலை அளிக்காமல் கூட்டத்தொடரைத் தள்ளிவைத்துக் கொண்டே வந்தது.

இதனிடையே ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி விசாரிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பெகாசஸ் மென்பொருளை வைத்து ஒன்றிய அரசு உளவு பார்த்தாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க வல்லுநர்கள் குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கிறோம் என உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெகாசஸ் குற்றச்சாட்டை ஒன்றிய அரசு எந்தவிதத்திலும் மறுக்கவில்லை. தேசியப் பாதுகாப்பு என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இருக்கும் ஒன்றிய அரசுக்கு எல்லாவற்றிலும் விலக்கு அளிக்க முடியாது.

மக்களின் அந்தரங்க உரிமை, பேச்சு சுதந்திரம் ஆகியவை உளவு பார்க்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு ஒட்டுக்கேட்பு குறித்து எந்தவிதமான விளக்கமும் தராமல் மறுப்பது என்பது போதுமானதாக இருக்காது.

இந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அலோக் ஜோஷி, டாக்டர் சந்தீப் ஓபராய் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு எட்டு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories