இந்தியா

OBCக்கான உச்ச வரம்பை EWSக்கும் பொருத்துவது எப்படி சமநிலையாகும்? - மோடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

நகரப்பகுதி, கிராமப்பகுதி அடிப்படையில் உச்சவரம்பை தீர்மானிக்கவும் இயலாது. இது அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

OBCக்கான உச்ச வரம்பை EWSக்கும் பொருத்துவது எப்படி சமநிலையாகும்? - மோடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான வருவாய் உச்சவரம்பை தீர்மானிப்பதை அரசின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும். நீதிமன்றம் முடிவு செய்ய இயலாது என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள பதிலில், வருவாய் உச்ச வரம்பை முடிவு செய்ய எந்த துல்லிய கணக்கீட்டு முறையும் இல்லை. கணித கணக்கீட்டு அடிப்படையில் அதனை முடிவுசெய்ய இயலாது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. நகரப்பகுதி, கிராமப்பகுதி அடிப்படையில் உச்சவரம்பை தீர்மானிக்கவும் இயலாது. இது அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளது.

ஓ.பி.சி பிரிவினருக்கான கிரீமீலெயர் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே உயர் வகுப்பினருக்கும் 8 லட்ச ரூபாய் வருவாய் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக 2010ஆம் ஆண்டு சினோ கமிஷன் அறிக்கை அளித்திருப்பதாகவும் ஒன்றிய அரசு பதிலில் கூறியுள்ளது.

மேலும், தற்போது தாக்கல் செய்துள்ள பதிலில் 5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள், 1000 சதுர அடி வீடு உள்ளவர்கள் 10% இட ஒதுக்கீட்டைப் பெற இயலாது என்று கூறப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு ஓ.பி.சி பிரிவினருக்கு ஒரு லட்ச ரூபாய் கிரிமிலெயர் முடிவு செய்யப்பட்டது. அது இன்று 8 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. அதனையும் கருத்தில் கொண்டே 10% இட ஒதுக்கீட்டுக்கும் 8 லட்ச ரூபாய் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க, சமூகத்தில் பிந்தங்கிய ஓ.பி.சி பிரிவினருக்கான அதே வருவாய் உச்ச வரம்பை நிர்ணயித்திருப்பது எப்படி அரசியல் சாசன அடிப்படையில் சமநிலையை ஏற்படுத்தும்? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

banner

Related Stories

Related Stories