இந்தியா

"சேர்த்துவச்ச காசை கொடுக்குறேன்.. உடனே இதை பண்ணுங்க" : கர்நாடக முதல்வருக்கு 7 வயது சிறுமி வைத்த கோரிக்கை!

சாலையில் உள்ள குழிகளைச் சரி செய்ய வேண்டும் என கோரி கர்நாடக முதல்வருக்கு ஏழு வயது சிறுமி கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"சேர்த்துவச்ச காசை கொடுக்குறேன்.. உடனே இதை பண்ணுங்க" : கர்நாடக முதல்வருக்கு 7 வயது சிறுமி வைத்த கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், திப்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தவானி. சிறுமியான இவர் அரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கட்டிடத் தொழிலாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தவானியின் தாய் ரேகா சாலையிலிருந்த குழியில் சிக்கி விபத்துக்குள்ளானார். இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதேபோல் மாற்றுத்திறனாளி ஒருவரும் மூன்று சக்கர வாகனத்தில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்களும் சிறுமி தவானியை அதிகமாகப் பாதித்துள்ளன.

இந்நிலையில், குண்டும் குழியுமான சாலைகளைச் சரி செய்ய வேண்டும் எனக் கோரி சிறுமி தவானி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்குக் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,"வணக்கம் தாத்தா. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலையிலிருந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் எனது அம்மாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சாலையில் உள்ள குழிகள் காரணமாக ஏற்படும் விபத்துகளை அவர்களது குடும்பங்கள் எப்படிச் சமாளிக்கும்?

குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்கள் வேலைக்குச் செல்வார்கள். வீட்டில் இருக்கும் மற்றவர்கள், அவர்களுக்காக வீட்டில் காத்திருப்பார்கள். அதேபோல் என் தந்தை நலமுடன் வீடு திரும்புவார் என்று எப்போதும் நான் காத்திருக்கிறேன்.

எனவே சாலையில் உள்ள குழிகளைச் சரிசெய்து அனைவரது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நான் மிட்டாய் வாங்கி சாப்பிட, நான் தண்ணீர் குடிக்கும்போது எல்லாம் எனது தந்தை ஒரு ரூபாய் கொடுப்பார், அதை சாலையில் உள்ள பள்ளங்களை மூடும் பணிக்காகத் தான் சேமித்து வைத்திருக்கிறேன். இதுவரை 40 ரூபாய் சேமித்து வைத்துள்ளேன். இந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன். சாலைகளைச் சரி செய்யுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுமியின் வீடியோவை பலரும் இணையத்தில் பதிவிட்டு சிறுமியின் வேண்டுகோளை உடனே நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories