இந்தியா

"மதுரை AIIMS பணிகள் எப்ப தொடங்கும்னு எங்களுக்கே தெரியாது” : கைவிரித்த ஒன்றிய அரசு... மக்கள் அதிர்ச்சி!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"மதுரை AIIMS பணிகள் எப்ப தொடங்கும்னு எங்களுக்கே தெரியாது” : கைவிரித்த ஒன்றிய அரசு... மக்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. பின் 2018 ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019 ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மதுரை எய்ம்ஸ் டெண்டர், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டுமான பணிகள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் கேட்டிருந்தார்.

அதற்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், "திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டிடங்கள் வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை எய்ம்ஸில் மருத்துவ மாணவர் சேர்க்கை வகுப்புகளைத் தொடங்குவதற்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைந்து தொடங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் தென்மாவட்ட மக்கள் காத்திருந்த நிலையில், கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்றே தெரியாது என ஒன்றிய அரசு தெரிவித்திருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories