இந்தியா

“ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி வேண்டும்” - குடியரசுத் தலைவருக்கு 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம்!

ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

“ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி வேண்டும்” - குடியரசுத் தலைவருக்கு 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்குப் போராடிய சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டேன் சுவாமி பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார். இந்நிலையில்தான் அவரை தேசிய புலனாய்வு மையம் கைது செய்தது.

ஸ்டேன் சுவாமிக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று அவரது தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டுப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று பிற்பகலில் உயிரிழந்தார்.

ஸ்டேன் சுவாமியின் இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அவரது மறைவுச் செய்தி மும்பை உயர்நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்டேன் சுவாமியின் மறைவுக்குக் காரணமான ஒன்றிய அரசை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

“ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி வேண்டும்” - குடியரசுத் தலைவருக்கு 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம்!

அந்தக் கடிதத்தில், “எதிர்க்கட்சித் தலைவர்களான நாங்கள், மனித உரிமைப் போராளியான பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கொடூர மரணத்தால் மிகுந்த மனத்துயரோடு உள்ளோம். பார்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன் சுவாமி, பலமுறை முறையிட்டும், அவருக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. மேலும் அவர் நீர் அருந்துவதற்கு ஸ்ட்ரா (Straw) வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அளவில் பலர் இதற்காக குரல் எழுப்பிய பிறகே அவருக்கு ஸ்ட்ரா வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக சிறைக் கைதிகள் இருந்த தலோஜா சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என பாதிரியார் ஸ்டேன் சுவாமி கோரிக்கை வைத்தும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அது காலதாமதமான நடவடிக்கை என்பதால் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இதனால் ஸ்டேன் சுவாமியின் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, ஜாமீனில் கூட விடுவிக்காமல் தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைத்திருந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்தியாவின் குடியரசுத் தலைவரான நீங்கள் உங்களுடைய அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் பாதிரியாரின் மரணத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், UAPA எனப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பிஹிமா கோரிகோன் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை, தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரிகள் தலைவர் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories