இந்தியா

“ஆங்கிலத்தில் எழுப்பிய RTI கேள்விகளுக்கு இந்தியில் பதிலளித்த ஒன்றிய அரசு” : கொந்தளித்த சமூக ஆர்வலர்!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்புவோருக்கு ஒன்றிய அரசு இந்தியில் பதில் அளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆங்கிலத்தில் எழுப்பிய RTI கேள்விகளுக்கு இந்தியில் பதிலளித்த ஒன்றிய அரசு” : கொந்தளித்த சமூக ஆர்வலர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதும், அதை எதிர்த்து தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் ஒலிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தியை திணிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த முயற்சியிலிருந்து மத்திய பா.ஜ.க. அரசு பின்வாங்கியது.

ஆனாலும் இந்தியை திணிக்கும் தனது போக்கை மட்டும் ஒன்றிய மோடி அரசு நிறுத்தியபாடில்லை. சமீபத்தில் கூட, தமிழ்நாட்டு எம்.பி-க்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்டவிரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சு.வெங்கடேசன் எம்.பி பொது நல வழக்கை தாக்கல் செய்து அதுதொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்புவோருக்கு ஒன்றிய அரசு இந்தியில் பதில் அளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன். இவர் இந்திய மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் தொடர்பாக உரிய தகவல்களை வழங்கவேண்டும் என ஆங்கிலத்தில் கேட்டிருந்தார்.

அதற்கு முறையாக ஆங்கிலத்தில் பதில் அளிக்காமல், இந்தியில் பதில் அளித்துள்ளது. டெல்லி காலாவதி சரண் மருத்துவமனை வெளியிட்டுள்ள அந்த கடித உறை மீதான விலாசத்தையும் இந்தியிலேயே எழுதி அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து இதுபோல இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories