இந்தியா

LKG குழந்தையா?.. பா.ஜ.க கவுன்சிலரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மேயர் ஆர்யா ராஜேந்திரன் - குவியும் பாராட்டு!

வயதை வைத்து விமர்சனம் செய்த பா.ஜ.க கவுன்சிலருக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் தக்க பதிலடி கொடுத்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LKG குழந்தையா?.. பா.ஜ.க கவுன்சிலரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மேயர் ஆர்யா ராஜேந்திரன் - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு பெற்றி பெற்று திருவனந்தபுர மேயராக ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்தியாவில் 21 வயதுடைய இளம் மேயர் என்ற பாராட்டையும் பெற்றார்.

இதையடுத்து தனது கல்லூரி படிப்புடன் சேர்ந்து, கொரோனா நெருக்கடியிலும் திருவனந்தபுரம் மக்களுக்காக கலத்தில் நின்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், மேயர் ஆர்யா ராஜேந்திரன் மக்களுக்கான சேவை செய்துவருவதையும், அவரின் வளர்ச்சியையும் பிடிக்காத பா.ஜ.க கவுன்சிலர் கருமண அஜித், அவரது வயதை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அவரின் அந்த பதிவில், “மக்கள் வரிப்பணத்தில் பொருட்கள் லட்சக்கணக்கில் வாங்கப்படுகின்றன. மேயர் நாற்காலியில் அமர்ந்து விளையாடும் ஏ.கே.ஜி மையத்தின் எல்.கே.ஜி குழந்தைகளால் அழிக்கப்படுவதற்கான பொருட்கள் அல்ல அவைகள்” என்று அவரின் வயதைக் குறிக்கும் வித்தில் விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்.

மேலும், “கார்ப்பரேஷன் ஒரு குழந்தைகள் பூங்கா அல்ல என்பதையும், இது மக்களின் பணத்தைப் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டிய இடம் என்பதையும் தாழ்மையுடன் நினைவுபடுத்துகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏ.கே.ஜி மையம் என்பது கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தலைமையகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், பா.ஜ.க கவுன்சிலரின் விமர்சனத்திற்கு பிறகு நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், மேயர் ஆர்யா ராஜேந்திரன் அவருக்குப் பதிலடி கொடுத்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், “நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளீர்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த சபையில் உள்ள எவரும் இங்கு நியாயமான எதையும் கூறலாம்.

நீங்கள் அனைவரும் என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளீர்கள். குறிப்பான எனது வயது, முதிர்ச்சி தொடர்பாக அதிகம் விமர்சித்துள்ளீர்கள். ஆனால் இப்போது, நான் இதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

LKG குழந்தையா?.. பா.ஜ.க கவுன்சிலரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மேயர் ஆர்யா ராஜேந்திரன் - குவியும் பாராட்டு!

இந்த வயதில் நான் மேயராகிவிட்டால், அதற்கேற்ப எவ்வாறு செயல்படுவது என்பது எனக்குத் தெரியும். அத்தகைய அமைப்பின் மூலம் நான் வளர்ந்தேன் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்.

இளைய தலைமுறையினரின் கருத்துக்கள், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் அவர்கள் வெளியிடும் அவதூறான கருத்துக்கள் உட்பட உங்களைப் பின்தொடர்பவர்களின் கருத்துகளை நான் உங்களுக்குக் காட்டினால், இந்த மேயரும் ‘வீட்டில் சகோதரிகள் மற்றும் தாய்மார்கள்’ போன்றவர் என்பதை நீங்கள் நினைவில் கொள்வீர்கள்.

எந்த ஒரு பெண்ணை அவமதித்தாலும் அது மோசமானதே. மேலும் எல்.கே.ஜி குழந்தை என்று அழைப்பதன் மூலமாகவோ அல்லது இங்கே காணப்பட்டதைப் பெயரிடுவதன் மூலமாகவோ இருந்தாலும், நீங்கள் கொடுப்பதை மட்டுமே நீங்கள் திரும்பப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சபைக்குள் யாரும் தனிப்பட்ட முறையில் யாரையும் அவமதிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் பேசும் போது, பா.ஜ.கவினர் அவர் தொடர்ந்து பேசவிடாமல் கூச்சலிட்டுக் கொண்டே இருந்த போதும், பா.ஜ.கவினருக்கு தக்க பதிலடி கொடுத்து பேசிய இவரின் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.மேலும், மேயர் ஆர்யா ராஜேந்திரன் வீடியோ பதிவிட்டு, உங்களின் துணிச்சலான பேச்சுக்கு வாழ்த்துக்கள் என அவரை இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories