இந்தியா

தேர்தலுக்கு கருப்புப் பணத்தைப் பயன்படுத்திய பா.ஜ.க : அம்பலப்படுத்திய கொள்ளைச் சம்பவம்!

கேரள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவினர் கருப்புப் பணத்தைச் செலவிட்டது, கொள்ளைச் சம்பவம் ஒன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.

தேர்தலுக்கு கருப்புப் பணத்தைப் பயன்படுத்திய பா.ஜ.க : அம்பலப்படுத்திய கொள்ளைச் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கருப்புப் பணத்தைச் செலவு செய்திருப்பது ஒரு கொள்ளை சம்பவத்தின் மூலம் உறுதியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திரிச்சூர் - எர்ணாகுளம் நெடுஞ்சாலையில் அதிகளவிலான பணத்துடன் சென்ற கார் ஒன்றை கொடகர அருகில் ஒரு கும்பல் வழிமறித்துக் கொள்ளையடித்தது. இந்த கொள்ளைச் சம்பவம் வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

இதையடுத்து ரூபாய் 25 லட்சம் கொள்ளை போனதாக கார் ஓட்டுநர் ஷம்ஜீர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தர்ம ராஜ் என்பவர் மூலம் காரில் பணம் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர் கொள்ளை போனது ரூபாய் 25 லட்சம் இல்லை என்பதையும் ரூபாய் 3.5 கோடி காரில் கொள்ளையடிக்கப்பட்டதையும் போலிஸார் கண்டுபிடித்தனர். இந்தப் பணம் பா.ஜ.கவின் தலைமையிடத்திலிருந்து தேர்தல் செலவுக்காக அனுப்பட்டதாகவும், அதை பா.ஜ.கவை சேர்ந்தவர்களே கொள்ளை அடித்திருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த கருப்புப் பணம் குறித்து நீதி விசாரணை நடத்தி வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளன. மேலும் இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக 20 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1 கோடி ரூபாய் பணம், 347 கிராம் தங்க நகைகள், மொபைல் போன்கள், கைக்கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளை நடந்த அன்று ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் தர்மராஜ், பா.ஜ.க மாநில தலைவரின் மகன் அரிகிருஷ்ணனிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளார்.இதனால் இவரிடமும் போலிஸார் விசாரணை நடத்த உள்ளனர். அதேபோல் திரிச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியிடமும் போலிஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது பேசிய முதல்வர் பினராயி விஜயன், "காரில் கருப்புப் பணம் கடத்த முயன்ற வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்றார். அதேபோல் தமிழக தேர்தல் களத்திலும் பா.ஜ.கவினர் கருப்புப் பணம் பயன்படுத்தப்பட்டதாக எஸ்.வி.சேகர் பேசிய ஆடியோ அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories