இந்தியா

தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுத்துறை நிறுவனங்களை கைவிட்டு தனியாரை வளர்க்கும் மோடி அரசு - தீக்கதிர் தலையங்கம்

அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதன் மூலமே கொரோனவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆனால் அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என தீக்கதிர் நாளேடு சாடியுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுத்துறை நிறுவனங்களை கைவிட்டு தனியாரை வளர்க்கும் மோடி அரசு - தீக்கதிர் தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் கடுமையாக உள்ள நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று மீண்டும் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இதேபோன்று 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. கொரோனா முதல் அலையின்பொழுதே மத்திய அரசு அலட்சியம் காட்டியது. இரண்டாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்களும், சர்வதேசஅமைப்புகளும் எச்சரித்தும் அதை புறக்கணித்தது. கடந்த அலையின் போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலான நாடுகளில் கொரோனா அலையின் இரண்டாவது, மூன்றாவது அலைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதற்கு காரணமாக தடுப்பூசி அமைந்தது என்பது உண்மை. ஆனால் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகும் அனைவருக்கும் தடுப்பூசி தாமதமின்றி கிடைப்பதில் மோடி அரசு அலட்சியமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 2.04 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனர். குறைந்தபட்சம் 80 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி போடப்பட்டால்தான் கொரோனா பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.

ஆனால் கொரோனா எனும் கொடுநோய் காலத்தில் கூட பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைப்பதிலேயே மோடி அரசு குறியாக உள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஒரே மருந்திற்கு மூன்று விலை தீர்மானித்துள்ளன. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும் மோடி அரசு கண்டுகொள்வதாக இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகளின் தலையிலேயே பெரும்பாலும் கட்டியுள்ள மத்திய அரசு, அந்த அரசுகளுக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிக விலை தீர்மானிப்பதை தடுக்கவில்லை.

மாறாக இந்தத் திட்டத்தை பிரதமர் மோடியே முன்மொழிந்து ஊக்கப்படுத்துகிறார். பொதுத்துறை நிறுவனங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் தடுப்பூசி உற்பத்திப் பணியை பல மடங்கு பெருக்க முடியும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், உச்ச நீதிமன்றமும் பலமுறை எடுத்துரைத்த போதும் மோடி அரசு மவுனம் சாதிக்கிறது. இதற்கான சாத்தியக்கூறு என்ன என்பது குறித்து கூட விவாதிக்க மறுக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டாலும் அக்டோபரில்தான் ஓரளவு இயல்பு நிலை வரும் என கணிக்கப்படுகிறது. மறுபுறத்தில் மூன்றாவது அலை குறித்த செய்திகளும் கவலை அளிக்கிறது. இப்போதைக்கு அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதன் மூலமே கொரோனவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆனால் அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்த விரும்பவில்லை. கையில் வெண்ணெய் இருக்கிறது. ஆனால் மக்கள் உயிரிழந்தாலும் நெய் உற்பத்தியின் முழு பலனும் தனியாருக்கே போக வேண்டும் என மோடி அரசு நினைப்பதுதான் இப்போதைய முதல் சிக்கல்.

banner

Related Stories

Related Stories