இந்தியா

மனைவி நகையை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய ம.பி. இளைஞர்; நெருக்கடி காலத்தில் உதித்த நிஜ ஹீரோ!

போபாலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், தனது ஆட்டோவை சிறிய ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகிறார்.

மனைவி நகையை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய ம.பி. இளைஞர்; நெருக்கடி காலத்தில் உதித்த நிஜ ஹீரோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காட்டுத்தீயைப் போல வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தில்லி மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டால் மக்கள் ஆக்சிஜனை வாங்குவதற்காக வீதி வீதியாக அலைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாவித் கான் என்பவர், தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.

போபால் நகரத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது. மேலும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் உடனடியாக கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இப்படி அவதிப்படுபவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என ஜாவித்கான் முடிவு செய்துள்ளார். இது குறித்து தனது குடும்பத்தாரிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர், மனைவியின் நகைகளை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஜாவித்கான் தனது ஆட்டோவை ஆக்சிஜன் வசதிகளை கொண்ட சிறிய ஆம்புலன்சாகவே மாற்றியுள்ளார்.

மனைவி நகையை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய ம.பி. இளைஞர்; நெருக்கடி காலத்தில் உதித்த நிஜ ஹீரோ!

இதுகுறித்து ஜாவித் கான் கூறுகையில், " நான் கடந்த 18 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றால் என் மனம் மிகவும் கவலையடைந்தது. நான் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.

பின்னர் என் மனைவி நகைகளை விற்று, எனது ஆட்டோவை சிறிய ஆம்புலன்ஸாக மாற்றி அமைத்துள்ளேன். ஆம்புலன்ஸ் கிடைக்காவிட்டால் மக்கள் என்னை அழைக்கலாம். கடந்த 15, 20 நாட்களாக இதை செய்து கொண்டிருக்கிறேன். தினமும் 8 முதல் 10 பேர் வரை என் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறேன்" என கூறுகிறார்.

கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஜாவேத் கான், தன் பாதுகாப்புக்கு என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தால் ஆட்டோவில் பயணிகளுக்கும் தனக்கும் இடையே பிளாஸ்டிக் தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். இப்படி ஒரு ஆபத்தான நிலையிலும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளுக்காக ஜாவித் கான் சேவையை போபால் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த நெருக்கடியான காலத்திலும் ஜாவித் கான் போன்று நிஜ கதாநாயகர்கள் உருவாகி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories