இந்தியா

கொரோனாவை எதிர்கொள்வதில் தடுமாறும் மோடி அரசு... தடுப்பூசி செலுத்துவதில் ஏன் இத்தனை குழப்பம்?

மக்களை அச்சுறுத்துகிற கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு எத்தகைய தடுமாற்றத்துடன், தெளிவான அணுகுமுறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

கொரோனாவை எதிர்கொள்வதில் தடுமாறும் மோடி அரசு... தடுப்பூசி செலுத்துவதில் ஏன் இத்தனை குழப்பம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து ஜனநாயக செயல்பாடுகள் முடங்கிய நிலையில், மத்திய அரசுக்குத் தெளிவு ஏற்படுத்துகிற வகையில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறேன்.

நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திலும், பீதியிலும் இருக்கும்போது சரியான வழிகாட்டுதலை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு 50 சதவிகிதமும், மாநில அரசுகள் 50 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தவிர்த்து, மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்குச் சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.

ஒரு தடுப்பூசிக்கு மூன்று விலைகள் நிர்ணயம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தடுப்பூசி ரூ.185 விலையில் விற்கும்போது, இந்தியாவில் ரூ.400, ரூ.600, ரூ.1,200 என்று விற்பது எந்த வகையில் நியாயம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

அதேபோல, தடுப்பூசி விலையை நிர்ணயிக்கிற உரிமையைத் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏன் வழங்கியது என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. 'இதற்கெல்லாம் என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது, கால அவகாசம் தேவை' என்று மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியிருக்கிறார்.

இதன்மூலம் இந்திய மக்களை அச்சுறுத்துகிற கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு எத்தகைய தடுமாற்றத்துடன், தெளிவான அணுகுமுறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

கொரோனா என்பதைப் பேரிடராகக் கருதி, போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு உரிய முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஏற்கெனவே 4 மாதங்கள் விரயமாகி உள்ளன. தடுப்பூசி உற்பத்தியை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதோடு, கூடுதலாகப் பல நிறுவனங்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கியிருக்கலாம்.

இன்றைக்கு சீரம் நிறுவனம் மாதம் 6 கோடி தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் 1 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்கின்றன. ஜூலை முதல் உற்பத்தியைக் கூட்டுவதாக உறுதி செய்துள்ளது.

கொரோனாவை எதிர்கொள்வதில் தடுமாறும் மோடி அரசு... தடுப்பூசி செலுத்துவதில் ஏன் இத்தனை குழப்பம்?

இதற்கு மத்திய அரசு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதென மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம், 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில், 12 கோடி ஏற்கெனவே போடப்பட்டுள்ளன. மேலும். ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன.

இந்நிலையில், புதிய தடுப்பூசி கொள்கையின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட 63 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ்கள் போட 120 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.

மத்திய அரசு கொள்முதல் விலையான ரூ.150 விலையில் கூட, தயாரிப்பு நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச லாபம் இருக்கிறது. தற்போது, தடுப்பூசி கொள்கையின்படி மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.34 ஆயிரத்து 400 கோடியும் செலவாகும். இதன் மூலம், மொத்தம் ரூ.42 ஆயிரம் கோடிதான் செலவாகும். ஏற்கெனவே, 2020-21 பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்த கால அரசுகள் பொறுப்பை ஏற்றுக்கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும்.

தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து இதற்கான நிதியை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி உடனடியாக தடுப்பூசி போட்டு கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்காகப் போராடுகிற மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை பிரதமர் மோடி புரிந்துகொண்டு ஏற்கெனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

பிரதமர் மோடி நினைத்தால், அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட முடியும். இதைச் செய்வதன் மூலம், இந்திய மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories