இந்தியா

“பா.ஜ.க சார்பில் போட்டியிடவேமாட்டேன்” : மேற்கு வங்கத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேச்சு!

என்னுடைய சம்மதமே இல்லாமல் எனது பெயரை அறிவித்துள்ளதாக பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“பா.ஜ.க சார்பில் போட்டியிடவேமாட்டேன்” : மேற்கு வங்கத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு குளறுபடிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது.

குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்தது. அதுமட்டுமல்லாது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில பா.ஜ.க வெளியிட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த பலருக்கு வாய்ப்புக்கொடுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் தங்களது கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இந்த பிரச்சனைகள் ஓய்வதற்குள், நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு மேலும் சிக்கலை சந்தித்துள்ளது பா.ஜ.க. குறிப்பாக, வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரங்களிலேயே, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தன்னுடைய சம்மதமே இல்லாமல் தனது பெயரை வேட்பாளராக அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் சவ்ரிங்கீ தொகுதியில், சிகா மித்ரா என்ற பெண் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவின் மனைவியாவார்.

இந்நிலையில், இவரது பெயர் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிகா மித்ரா, “எனது விருப்பம் இல்லாமலும், என்னுடைய சம்மதம் இல்லாமலும் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். நான் நிச்சயம் பா.ஜ.கவில் இணையப்போவதும் இல்லை, இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மேற்கு வங்கத் தேர்தலில் பா.ஜ.க பின்னடைவைச் சந்தித்து தர்மடங்கடமான நிலையை எட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

banner

Related Stories

Related Stories