இந்தியா

"விவசாயிகளுக்கு முன் நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல" : அமைச்சரின் பேச்சுக்கு ராகேஷ் திகாயத் பதிலடி!

மக்கள் கூட்டம் திரண்டபோது எல்லாம் அரசுகள் மாறியிருக்கின்றன என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத், மத்திய அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

"விவசாயிகளுக்கு முன் நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல" :  அமைச்சரின் பேச்சுக்கு  ராகேஷ் திகாயத் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உட்பட இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து டெல்லி எல்லையில், 90 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும், தங்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்ட பிரமாண்டமான போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் இந்த கூட்டத்தைப் பார்த்து மத்திய அரசு மிரண்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதைப் பார்த்து ஆத்திரமடைந்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "வெறும் கூட்டத்தைக் கூட்டுவது மட்டும் சட்டங்களை திரும்பப்பெற வழிவகுக்காது" என ஆணவமாக பேசியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"விவசாயிகளுக்கு முன் நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல" :  அமைச்சரின் பேச்சுக்கு  ராகேஷ் திகாயத் பதிலடி!

இதனைத் தொடர்ந்து, பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், " கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன" என அமைச்சருக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நடந்த மகாபஞ்சாயத்தில் பேசிய ராகேஷ் திகாயத், "வெறுமனே கூட்டத்தை கூட்டுவது மட்டும் சட்டங்களைத் திரும்பப்பெற வழிவகுக்காது என அமைச்சர் பேசுகிறார். ஆனால் அவர்கள் ஒரு உண்மையை மறந்துவிட்டார்கள். கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன.

விவசாயிகள் தங்கள் சொந்த விளைச்சலையே அழிக்க முடியுமா? என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அவற்றுக்கு முன் நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. வெறும் வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல, மின்சார திருத்த மசோதா, விதை மசோதா என அனைத்தைப் பற்றியும் கேள்விகள் உள்ளன. இந்தப் போராட்டம் விவசாயிகளுடையது மட்டுமல்ல, ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பிற துறையினருக்குமானது. இந்த சட்டங்கள் ஏழைகளை அழித்து விடும்.

எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். விவசாயிகளால் வயல்வெளிகளிலும், போராட்டக்களத்திலும் ஒரே நேரத்தில் பங்களிப்பு செய்ய முடியும். அது மட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை தியாகம் செய்யவும் விவசாயிகளால் முடியும்" எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories