இந்தியா

“பொருளாதாரத்தை வேகமாக அழித்தொழிப்பது எப்படி?” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி!

பா.ஜ.க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பா.ஜ.க ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சியையும் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.

“பொருளாதாரத்தை வேகமாக அழித்தொழிப்பது எப்படி?” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க அரசின் தோல்விகள், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10.33 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று குறிப்பிட்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி வங்கதேசத்தைவிட இந்தியா கொரோனா வைரஸை மோசமாகக் கையாண்டது குறித்து ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவலையும், கொரோனா பாதிப்பு கணக்கீட்டையும் ஒப்பிட்டு மத்திய பா.ஜ.க அரசை கடுமையாகச் சாடியுள்ளார் ராகுல் காந்தி.

சர்வதேச நிதியம் 2020ல் வங்கதேசம் அதிகபட்சமாக 3.8 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைப் பெறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனாவில் ஒரு மில்லியனுக்கு 34 பேர் வங்கதேசத்தில் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1.9 சதவீதம் வளர்ச்சியடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அங்கு மில்லியனுக்கு 3 பேர் கொரோனாவில் உயிரிழந்தனர்.

வியட்நாமில் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதம் உயரும். அங்கு கொரோனாவால் மில்லியனுக்கு 0.4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம். அங்கு மில்லியனுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரு மில்லியன் மக்களில் 83 பேர் உயிரிழக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.33 சதவீதம் வீழ்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புள்ளிவிபர படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “பொருளாதாரத்தை வேகமாக முழுமையாக அழிப்பது எப்படி? அதிகமான மக்களை கொரோனா தொற்றுக்கு உள்ளாக்குவது எப்படி?” என மோடி அரசை காட்டமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories