இந்தியா

பெட்ரோல் டீசல் விலை: வரி மட்டுமே 69%; இதைவிட வேறென்ன கொடூரம் இருக்கக்கூடும்? - மோடி அரசை சாடிய காங்கிரஸ்!

கொஞ்சம் கூட கவலைப்படாமல் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்புவது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை என கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.

modi amith shah
modi amith shah
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய மோடி அரசு குறைக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்கு தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கி, நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.

மே 2014 இல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், டீசலில் ரூபாய் 3.56 ஆகவும் மிகமிக குறைவாக இருந்தன. ஆனால், தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் படிப்படியாக கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூடுதல் கலால் வரி பெட்ரோல் மீது ரூபாய் 2 உயர்த்தியதோடு, சாலை செஸ் வரி ஒரு லிட்டருக்கு ரூபாய் 8 ஆக உயர்த்தியிருக்கிறது.

மொத்தத்தில் பெட்ரோல் விற்பனை விலையில் வரியாக 69.40 சதவிகிதமும், டீசலில் 69.30 சதவிகிதமும் மத்திய - மாநில அரசுகள் வரியாக வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. சர்வதேச சந்தையில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 42 டாலராக குறைந்திருக்கிறது. இந்த விலை குறைப்பை பயன்படுத்திக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் வரிகளை விதித்து மக்கள் மீது சுமையை ஏற்றி, கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதைவிட கொடூரமான நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

பெட்ரோல் டீசல் விலை: வரி மட்டுமே 69%; இதைவிட வேறென்ன கொடூரம் இருக்கக்கூடும்? - மோடி அரசை சாடிய காங்கிரஸ்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது. அதனால், பொருள்களின் விலை உயருகிறது. இதன்மூலம் இறுதியாக பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, சாதாரண மக்கள் தான். இதுகுறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்புவது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது.

ஆனால், மத்திய பா.ஜ.க அரசு கலால் வரி விதிப்பதை நிறுத்துவதாக தெரியவில்லை. இத்தகைய வரி விதிப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைப் பற்றி கவலைப்படாத மத்திய பா.ஜ.க அரசுக்கு பாடம் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து, விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories