இந்தியா

“பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கேரளா மற்றும் தமிழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடும் தமிழகம் வாழ் மலையாள மக்களும், கேரள மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

ஓணம் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, கேரள மக்களுக்கும், மலையாள மொழி பேசும் மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஓணம் பண்டிகையையொட்டி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். “ஓணம் திருநாள்” பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.

கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது.

தீரமும், ஈரமும் மிகுந்த "மகாபலி" சக்ரவர்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வரவேற்கும் நாளாகத் துவங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவுகள் பரிமாறுதல் போன்றவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டு, தங்களுக்குள் உள்ள மேம்பட்ட உறவினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விழா இது. இளைஞர்கள் மத்தியில் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியப் படகுப்போட்டியைப் பத்து நாட்கள் நடத்தி - அந்த 10-வது நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் ஓணம் திருவிழா இனிதாக நிறைவடைகிறது.

“பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் பழக்க வழக்கங்களையும் உணர்வுகளையும் மதிக்கும் பொருட்டு, ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக நாகர்கோவில், கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து, 2006-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.

பிறகு தமிழ்நாடு மலையாளி சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சென்னை மாநகரத்திற்கும் “உள்ளூர் விடுமுறை” என்று 14.8.2007 அன்று அறிவித்து - தமிழகத்தில் வாழும் மலையாள மக்களின் உணர்வுகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்தவர்.

பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் - திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழகம் வாழ் மலையாள மக்களும் - கேரள மக்கள் அனைவரும் - ஆரோக்கியமான வாழ்வும் – அனைத்து வளங்களும் பெற்று எந்நாளும் இன்புற்றிருக்க வேண்டும் என்று “ஓணம் திருநாள்” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories