இந்தியா

"நமோ டி.வி செலவினை மறைத்த பா.ஜ.க” - தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

'நமோ டி.வி’ செலவினை மறைத்த பா.ஜ.க மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என தலைமைத் தேர்தல்ஆணையருக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

"நமோ டி.வி செலவினை மறைத்த பா.ஜ.க” - தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘நமோ டிவி’ செலவினை மறைத்த பா.ஜ.க மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிற்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “டிஜிட்டல் தேர்தல் பிரச்சார முன்மொழிவு குறித்தும், அத்துடன் அதைவிட மிகவும் முக்கியமாக தேர்தல் நிதி சம்பந்தமான அடிப்படைப் பிரச்சனை குறித்தும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். 

உண்மையில், பீகார், முதன்மைத் தேர்தல் ஆணையர், கொரோனா வைரஸ் தொற்று பொங்கி எழுந்துகொண்டிருப்பதன் காரணமாக, ஒட்டுமொத்த தேர்தல் பணியும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று கூறிய முன்மொழிவை, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. காரணம் இதற்கு வாக்காளர்களைச் சந்திப்பதில் பெரிய அளவில் இடைவெளி ஏற்படும் என்பது மட்டுமல்ல, வாக்காளர்களைச் சந்திப்பதற்குப் பெரிய அளவில் நிதி ஆதாரங்களும் தேவைப்படும் என்பதாலும் இதனை அவர்கள் எதிர்த்தனர்.

கீழ்க்காணம் நிகழ்ச்சிப்போக்குகளைத் தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 2019 பொதுத்தேர்தலின்போது, அப்போது பா.ஜ.கவின் தலைவராக இருந்த அமித்ஷா, தங்கள் கட்சி 32 லட்சம் ‘வாட்சப்’ குழுக்களுடன் வலைப்பின்னலைக் கொண்டிருப்பதன் காரணமாக, ஒரு செய்தியை, அது உண்மையானதாகவோ அல்லது பொய்யானதாகவோ இருந்தாலும், ஒருசில மணி நேரத்தில் வைரலாகக் கொண்டுசெல்ல முடியும் என்று பொதுக்கூட்ட மேடையிலேயே தெரிவித்திருந்தார். இத்துடன் மேலும், சர்வதேச அளவில் இணையதளங்களின் உண்மைத்தன்மைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள், பொய்ச் செய்திகளில் பெரும்பான்மையானவை இந்தியாவில்தான் உற்பத்திசெய்யப்படுகின்றன என்று கூறியிருக்கின்றன.

"நமோ டி.வி செலவினை மறைத்த பா.ஜ.க” - தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

இப்போது பீகார் சட்டமன்றத் தேர்தலின்போதும், அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பா.ஜ.க 72 ஆயிரம் எல்.இ.டி டிவி மானிடர்களை (LED TV monitors) பொருத்தியதைப் பார்த்தோம். ஆன்லைன் மூலமாக 60 பேரணி/பொதுக்கூட்டங்களை நடத்தியபின்னர், பா.ஜ.க தங்களுடைய தேர்தல் பிரச்சார முயற்சிகள், 9,500 ஐ.டி.செல்களை சம்பந்தப்படுத்திடும் என்றும், இவற்றின் மூலம் 72 ஆயிரம் ‘வாட்சப்’ குழுக்களும் இணைக்கப்படும் என்றும், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறு 50 ஆயிரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறியிருக்கிறது.

இத்தகைய தொழில்நுட்பத்திற்குத் தேவைப்படும் மனித சக்தி மற்றும் செலவினத்தைக் கணக்கில்  கொண்டோமானால், மலைப்பைத் தட்டும். கார்ப்பரேட்டுகளின் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க பெற்றிருக்கும் நிதி விவரங்களுடன் பா.ஜ.கவிற்கும் இதர கட்சிகளுக்கும் இடையேயுள்ள நிதி நிலைமைகளைப் பார்க்கும்போது, பா.ஜ.கவிற்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே இடைவெளி மிகப்பெரிய அளவில் விரிவடைந்திருப்பதைக் காண முடியும். உச்சவரம்பு எதுவுமின்றி தேர்தல் பத்திரங்களை அநாமதேயமான பெயர்களில் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெறுவது நிச்சயமாக தேர்தல் ஜனநாயகத்தை சவக்குழிக்குள் தள்ளிவிடும்.

பெரிய சவால்களாக இருக்கக்கூடிய மேலும் இரு பிரச்சனைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முதலாவதாக, மர்மமான நமோ டிவி (NaMo TV) அலைவரிசை. இது அப்போதிருந்த சட்டத்தை மீறி, 2019 மக்களவைத் தேர்தலின்போது ஏவப்பட்டது.  பின்னர் தேர்தல் முடிந்தபின் மர்மமான முறையில் காணாமலும் போய்விட்டது. 2019 ஏப்ரலில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர், டி.டி.எச் மூலம் ஒளிபரப்பப்பட்ட இந்த அலைவரிசைக்காக பா.ஜ.க-வினால் செலவு செய்யப்பட்டது என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். எனினும், இப்போது பா.ஜ.க, தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள கணக்குகளில் இந்தச் செலவினம் காட்டப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது அப்பட்டமான ஒரு தேர்தல் குற்றமாகும்.

இதற்காக தேர்தல் ஆணையம், பா.ஜ.கவிற்கு எதிராக தண்டனை நடவடிக்கை எதுவும் எடுத்திருக்கிறதா என்கிற உடனடிக் கேள்வி எழுகிறது. இல்லை எனில், ஏன் இல்லை? இந்தியத் தேர்தல் ஆணையம், பா.ஜ.க-வின் தேர்தல் முறைகேடுகள் குறித்து கடும் நடவடிக்கை எதுவும் எடுக்காததை விட்டுவிட்டாலும்கூட, ‘நமோ டி.வி’ தொடர்பாக, பா.ஜ.கவிற்கு எதிராக தெளிவான உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததிலிருந்து, அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சம வாய்ப்பு அளிக்கவில்லை என்று உறுதியுடன் என்னால் கூற முடியும்.

"நமோ டி.வி செலவினை மறைத்த பா.ஜ.க” - தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

இரண்டாவது பிரச்சனை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பிரச்சாரம் சம்பந்தப்பட்டது. பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமான விளம்பரம் மற்றும் சமூக ஊடக நிறுவனம் ஒன்று, மகாராஷ்ட்ரா முதன்மை தேர்தல் அதிகாரியால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் தேர்தல் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளம்பரங்கள் 2019 சட்டமன்றத் தேர்தலின்போது வெளியிடப்பட்டன என்றும் செய்திகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் 2019 மக்களைத் தேர்தலின்போதும் மேற்படி அதே சமூக ஊடக ஏஜென்சியை நியமனம் செய்து கொள்வதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்ததாகவும் செய்திகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. இது தொடர்பாக இப்போது பொதுவெளியில் ஏராளமான விவரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

தேர்தல் ஆணையத்திற்கு இருக்கின்ற சுதந்திரமான அரசமைப்புச்சட்ட அந்தஸ்தின்படி, அரசமைப்புச்சட்டத்தின் 324ஆவது பிரிவின்படி, நியாயமான தேர்தலை உத்தரவாதப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். எனவே, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இவ்விவகாரங்கள் குறித்து நியாயமாகவும் நேர்மையகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, அவ்வாறு நடந்துகொள்வதாக அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவதும் மேலும் அவசியமான ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories