இந்தியா

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்துக்கு முரணாக உள்ளது PM Cares நிதி? - இன்று தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்

பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் பொது பயன்பாட்டுக்கானது அல்ல. எனவே, ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் வராது என பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது.

இதன் மூலம் அதில் வசூலாகும் நன்கொடைகள் எவ்வாறு செலவழிக்கப்படுகின்றன என்பதை அறிய முடியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி மூத்த வழக்கறிஞர்கள் பிராசாந்த் பூஷன், துஷ்யந்த் தவே ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்துக்கு முரணாக உள்ளது PM Cares நிதி? - இன்று தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்
Kamal Kishore

இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிஎம் கேர்ஸ் நிதி என்பது தாமாக முன்வந்து நன்கொடை வழங்குவோரிடம் இருந்து பெறும் அறக்கட்டளையாகும் என்றும் , தேசிய பேரிடர் நிதி, மாநிலப் பேரிடர் நிதிக்கு வழக்கம்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால், மத்திய அரசின் வாதத்தை ஏற்கக் கூடாது எனவும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பிஎம் கேர்ஸ் நிதி உள்ளதால், பிஎம் கேரில் உள்ள நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

banner

Related Stories

Related Stories