இந்தியா

தி.மு.க எதிர்ப்பு எதிரொலி : இனி விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CISF முடிவு!

விமான நிலையங்களில் 100 சதவிகிதம் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்துவது கடினமானது என மத்திய தொழில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

தி.மு.க எதிர்ப்பு எதிரொலி : இனி விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த CISF முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விமான நிலையங்களில் பெரும்பாலும் மாநில மொழி தெரியாவதவர்கள் ஈடுபடுவதால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாவதாக நீண்ட காலமாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி டெல்லி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கனிமொழி எம்.பி, “இன்று விமான நிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேசமுடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியரா?” என்று என்னிடம் கேட்டார்.

இந்தியராக இருப்பது என்பது இந்தி மொழி தெரிந்திருப்பதற்கு சமம் என்கிற நிலை எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரிடம் இந்தி ஆதிக்க எண்ணத்தை வெளிப்படுத்திய அதிகாரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களையே அதிகளவில் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பயணிகள் மற்றும அவர்களது உடைமைகளை சோதனை செய்யும் பிரிவில் மாநில மொழி தெரிந்தவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் 100 சதவிகித பணியாளர்களும் உள்ளூர் மொழித் தெரிந்தவர்களாக இருக்க முடியாது என்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாட்டில் இந்தி மொழியைத் திணிக்க பா.ஜ.க அரசு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. மேலும், இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் இந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்கிற ரீதியில் தவறான கருத்தையும் பா.ஜ.க ஆதரவாளர்கள் விதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories