இந்தியா

+1, +2 பாடப்பிரிவுகள் குறைப்பு... கல்வியாளர்கள் சொல்லும் அதிர்ச்சிப் பின்னணி!

கணிதம், வேதியியல், வணிகக் கணிதம், வணிகவியல் போன்ற சில பாடங்களையே முற்றிலுமாக நீக்கி, பல பட்டப்படிப்புகளில் சேர வாய்ப்பிருந்த நிலை குறுக்கப்பட்டுள்ளது.

+1, +2 பாடப்பிரிவுகள் குறைப்பு... கல்வியாளர்கள் சொல்லும் அதிர்ச்சிப் பின்னணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்பது மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு ஒன்பதாவது மாதத்தில் வெளியான ஓர் அரசாணை மூலம் மீண்டும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது, மாநில அரசு. கல்வி அமைப்புகளும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசின் புதிய முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

அப்போதைய பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவின் பெயரால் வெளியிடப்பட்ட அந்த ஆணையின் எண் 166. அதன்படி மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவுகள் இந்த கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்படுகின்றன. இப்போது இருப்பதைப்போல 6 பாடப்பிரிவும் (600 மதிப்பெண்) நீடிக்கும்; இதேவேளையில் 2 மொழிப் பாடங்கள் தவிர்த்து மூன்று பாடங்களை மட்டும் கொண்ட 5 பாடப்பிரிவு முறை (500 மதிப்பெண்) புதிதாகக் கொண்டுவரப்படும். இதில் இரண்டில் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி பற்றிய அச்சத்தைப் போக்கவேண்டும் என்பதுதான் பாடத்திட்ட மாற்றதுக்கான காரணம் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய மாற்றம் அப்படியானதாக இல்லை; அரசாங்கம் சொல்லும் நோக்கத்தைக் காட்டிலும் வேறு உள்நோக்கங்களே இருக்கமுடியும் என்கிறார்கள், கல்வியாளர்கள்.

குறிப்பாக, அண்மைக்காலமாக தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு முறை, 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, மொழிப்பாடத்தைக் குறைப்பது போன்ற புதுப்புது அதிர்ச்சிகளை இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்தவண்ணம் இருக்கிறது. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு சிறுபிள்ளைகளுக்கு பொதுத்தேர்வைக் கைவிட்டது. தொடர்ச்சியாக தன்னுடைய அதிகார வரம்பை மீறி மாநில அரசின் பட்டியலில் உள்ள உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களைத் திணித்துவருகிறது. அதை உரியமுறையில் எதிர்த்துநிற்க வேண்டிய மாநில அரசோ டெல்லியின் ஆட்டத்துக்குத் தலையாட்டியபடி கைகட்டி வாய்மூடி இருந்துவருகிறது. இந்தப் பின்னணியில் அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டம் கடினமாக இருக்கிறது; மாணவர்களுக்கு சுமையாக இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.

அதை சரிசெய்வதாகக் கூறிக்கொண்டு இருக்கிற பாடங்களிலிருந்து கணிதம், வேதியியல், வணிகக் கணிதம், வணிகவியல் போன்ற சில பாடங்களையே முற்றிலுமாக நீக்கியுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டு வரை மூன்று நான்கு பட்டப்படிப்புகளில் சேர வாய்ப்பிருந்த நிலைமை குறுக்கப்பட்டு, ஒன்று இரண்டு படிப்புகளில் மட்டுமே சேரமுடியும் என்கிறபடி ஆகிவிட்டது.

+1, +2 பாடப்பிரிவுகள் குறைப்பு... கல்வியாளர்கள் சொல்லும் அதிர்ச்சிப் பின்னணி!

இதுகுறித்து கல்வியாளர்கள், உயர்கல்வி வல்லுநர்களிடம் பேசினோம்.

அரசுக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர், பேராசிரியர் ப.சிவக்குமார் :

“புதிய முடிவின்படி மேல்நிலைப் பள்ளியில் ஆறு பாடமும் உண்டு; ஐந்து பாடமும் உண்டு என்கிறார்கள். எது வேண்டுமென மாணவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அரசு கூறுகிறது. இங்கே மாணவர் தனக்கு விருப்பமான பாடப்பிரிவில் சேரக்கூடிய நிலைமையா இருக்கிறது? மதிப்பெண், கட்டணம், பெற்றோர் விருப்பம், பள்ளிச் சூழல் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு மாணவர் விருப்பமான பாடப்பிரிவை முடிவுசெய்ய முடியுமா என்ன? சரி, அப்படியே வைத்துக்கொண்டாலும் 6 பாடம்/ 5 பாடம் என வைத்தால், பள்ளி நிர்வாகமே எதைப் பின்பற்றும்? எத்தனை தனியார் பள்ளிகள் கூடுதலான பாடம் உள்ள பிரிவைச் சொல்லித்தர முன்வரும்? கூடுதலான ஆசிரியர்களை நியமிக்கத் தயாராக இருக்கும்?

ஆக, 5 பாட முறைதான் பெரும்பாலும் நடைமுறை என்றாகும். இதனால் தானாகவே அடுத்தகட்டமாகப் படிக்கவேண்டிய பாடவாய்ப்பு குறைந்துவிடும். அறிவியல் பாடத்தொகுதியில் வேதியியலும் கணிதமும் நீக்கப்பட்டால், ஐஐடி போன்றவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் உள்ள வேதியியலை எழுதமுடியாமல் போகும். நானோ தொழில்நுட்பத் துறை போன்றவை இயற்பியல், உயிரியல், வேதியியல் மூன்றோடும் தொடர்புடையவை. அதை முதன்மைப் படிப்பாக எடுக்கக்கூடிய மாணவருக்கு வேதியியல் பாடமே இரண்டு ஆண்டுகள் இல்லை என்றால், எப்படி அந்தப் படிப்பில் சேரமுடியும்? இப்போது மாநிலப் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு குறைவான பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றைத்தான் மாணவர்கள் எடுக்கவேண்டி இருக்கிறது. அதிலும் வாய்ப்புகளைக் குறைப்பது மாணவர்களின் கல்விவாய்ப்பையே குறைப்பதாகத்தான் அமையும். இரண்டு பாட முறைகள் இருப்பது மாணவர்களுக்கிடையே பாகுபாட்டை உண்டாக்கக்கூடியதும்கூட. எனவே, கடந்த ஆண்டுவரை இருக்கின்றபடி பாடப்பிரிவுகள் தொடரவேண்டும். “ என்கிறார் பேரா.சிவக்குமார்.

உயர்கல்வி வழிகாட்டல் வல்லுநர் ஜெயப்பிரகாஷ் காந்தி:

”மாணவர் விரும்பிய பாடப்பிரிவை எடுத்துக்கொள்ளலாம் என்பது சாதகமானதுதான். ஆனால் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் இப்படி அறிவித்தாலும், ஐஐடியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் சேர்ந்ததாகத்தானே இருக்கிறது! ஐஐடி தேர்வில் இது குழப்பத்தை உண்டாக்கும். பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கணிதம் அவசியமானது. எல்லா துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல்மயம் என மாறிவரும்போது குறிப்பிட்ட மாணவர்கள் கணிதம் படிக்காமல் இருப்பதால் அவர்கள் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் கணிதத்திறனும் இருந்தால்தான் வெற்றிபெற முடியும்.

உயிரித் தொழில்நுட்பம், பெட்ரோலிய பொறியியல், மருந்தியல் போன்ற படிப்புகளில் வேதியியல் கட்டாயம் இருக்கும். மேநிலைப் பள்ளியில் அது பாடமாகவே இல்லாமல் மாற்றினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதா? 12ஆம் வகுப்புவரை எல்லா மாணவர்களும் அடிப்படையான பாடங்களைப் படிக்கவேண்டும் என்கிற நோக்கத்துக்காகத்தான் இந்தப் பாடமுறை கொண்டுவரப்பட்டது. ” என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

+1, +2 பாடப்பிரிவுகள் குறைப்பு... கல்வியாளர்கள் சொல்லும் அதிர்ச்சிப் பின்னணி!

அரசினர் மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பழனிச்சாமியோ, ”புதிய பாடத்திட்டமானது அழுத்தமானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவேண்டுமானால் பாடத்திட்டத்தை அதற்கேற்ப மாற்றியமைக்கவேண்டும். இதனால் தொடக்கத்தில் சிரமங்கள் இருக்கலாம். அது கடினமாக இருந்தால் தேர்வு முறையை சில ஆண்டுகளுக்கு எளிமைப்படுத்துவதைப் போல வேறு மாற்றங்களைச் செய்யலாம். நாங்கள் படித்தபோது 10,11 வகுப்புகளில் 6 பாடங்கள் இருக்கும்; 6ஆவது பாடம் மட்டும் அவரவர் விருப்பப்படி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதன் மதிப்பெண்ணும் மொத்த மதிப்பெண்ணில் இடம்பெறும். யாரும் அவருக்குப் பிடித்தமான பாடத்தைப் படிக்கமுடியாமல் போகாது.” என்று 40 ஆண்டுகளுக்கு முந்தைய நடைமுறையை நினைவூட்டினார்.

ஆனால் அந்த முறையைக்கூட தமிழ்நாடு அரசு யோசிக்கவில்லை. உண்மையில் மாணவர்களின் பாடம் அதிகமாக இருக்கிறது; அது அவர்களுக்கு மனச்சுமையாகவும் தேவையில்லாத அழுத்தமாகவும் இருக்கிறது என்றால், அதைத் தீர்ப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பாடத்தையே நீக்குவது கல்விக்கு உகந்த செயல்பாடு அல்ல. கல்வியாளர்களும் வல்லுநர்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றனர்.

கல்விக் கூடங்களிலிருந்து பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட பின்னணி கொண்ட மாணவர்களை மறைமுகமாக விரட்டிவிடும் சமூக அநீதியும் இதில் ஒளிந்துகொண்டிருப்பது, மிகவும் ஆபத்து. இன்னார் எல்லாம் எதற்காக இன்னின்ன படிப்புகளைப் படிக்கவேண்டும் என்கிற ஆதிக்கக் குரலும் இதற்குப் பின்னால் ஒலித்தபடி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories