இந்தியா

20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பால் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும் 3 நன்மைகள்!

பொருளாதாரத்தை மீட்க 20 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என மோடியின் அறிவிப்பு 45 நாட்களுக்கு பின் ஏன் வெளி வந்திருக்கிறது? அதன் நோக்கம் என்ன?

20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பால் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும் 3 நன்மைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாட்டு மக்களுக்கு முக்கியமான செய்தியை கூற இருப்பதாகக் கூறி வழக்கம் போல ஏமாற்றி விட்டுச் சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. அவர் பேசியதில் பொருளாதாரத்தை சீர்படுத்த 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு பிரதானமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை மோடி இப்போது கூறுவதன் பின்னணியை சற்று கூர்ந்து கவனிப்பது அவசியமாகிறது.

20 லட்சம் கோடி!

தேசிய ஊரடங்கு அறிவிப்பால், கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றி, இடமின்றி, தங்கள் ஊருக்குச் செல்ல வழியின்றி நடந்தே சென்றனர். அதில் 300 பேருக்கும் மேல் பலியாகினர். பசியால் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. கூலித் தொழிலாளிகள், ஒப்பந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், தனியார் ஊழியர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என ஒரு பெரும் கூட்டமே அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் திணறினர்.

திடீரென நாட்டு மக்கள் முன் தோன்றி, உடனடி லாக்டவுன் அறிவித்து, தனக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்வதிலேயே கண்ணாக இருக்கும் பிரதமர் மோடிக்கு இவர்கள் பற்றி கவலையில்லை. அவர்கள் வாழ என்ன செய்வார்கள் என்ற கவலையில்லை. கவலைபட்டவர்கள் வைத்த கோரிக்கையையும் அவர் செவிமடுக்கவில்லை.

வருவாய் இல்லாமல் இந்த லாக்டவுனை சமாளிக்க நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குக்கும் குறைந்தது 5000 ரூபாய் நிவாரண நிதியாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பொருளாதாத்தில் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார். இன்று வரை அதைப்பற்றி வாய் திறக்கவில்லை பிரதமர்.

பசியால் மக்கள் சாகக் கூடாது என்பதற்காக 5 கிலோ அரிசி கொடுக்கிறோம் என்றார் நிர்மலா சீதாராமன். 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு மாதம், தினமும் மூன்று வேளை சாப்பிட இந்த 5 கிலோ அரிசி போதுமானதா என்ற கணக்கை கூட போடத் தெரியாதவர் தான் நிதியமைச்சராக இருக்கிறார்.

சரி ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த 5 கிலோ அரிசியும் கிடைக்காதே! அவர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்று சிந்தித்தனரா நிதியமைச்சரும், பிரதமரும். இது தான் இவர்களின் தொலை நோக்கு சிந்தனை. நாட்டின் முதல் கொரோனா நோய் தொற்று கேரளாவில் ஜனவரி 30-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது மே 25-ம் தேதி. திட்டமிடலுக்கு 45 நாட்களுக்கு மேல் இருந்தது. அப்போதெல்லாம் விழாக்கள் கொண்டாடிவிட்டு, கடைசி நேர ஸ்டன்டாக ஊரடங்கு அறிவித்து விட்டு, பிறகு உட்கார்ந்து திட்டமிட்டுக் கொண்டிருந்தனர் ஆளும் மேதாவிகள். இதை தட்டிக் கேட்க கூடாது என்பதற்காகவே கை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் போன்ற டாஸ்க்குகளை கொடுப்பது.

20 லட்சம் கோடி உண்மையாகவே மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிடப்படுமா? முதலில் செலவிடப்படுமா என்பதே நமக்கு எழும் பெரும் கேள்வி. ஏனெனில் மோடியின் டிராக் ரெக்கார்ட் அப்படி. 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என்ற சொன்னது நினைவிருக்கிறதா.

அந்த கேள்வியைக் கூட விட்டுவிடலாம். மக்கள் பசியில் சாகும்போது நிவாரண நிதி கொடுக்காத மோடி, 45 நாட்களுக்கு பின் இப்போது 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறோம் என்று அறிவிப்பதன் நோக்கம் என்ன? இதில் பா.ஜ.கவுக்கு மூன்று நன்மைகள் உண்டு.

1. ஊரடங்கு நேரத்தில் நிவாரண நிதி கொடுத்திருந்தால் உணவு, வாடகை, மருத்துவம் என அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் செலவு செய்திருப்பார்கள். ஆனால் எல்லாம் முடிந்த பின் நிதி கொடுத்தால் தேவையைத் தாண்டி சில பொருட்கள் வாங்க வைக்கலாம். அதாவது வீண் செலவு செய்யத் தூண்டுவது. பசிக்கு உதவாமல் முதலாளிகளுக்கு உதவவே இந்த நிதியுதவி.

2. கொரோனாவால் அல்ல, அதற்கு முன் கடந்த ஓராண்டாகவே மக்களின் வாங்கும் திறன் குறைந்து தான் இருக்கிறது. அப்படி ஒரு நிலையில் தான் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 1.75 லட்சம் கோடி வரி தள்ளுபடி கொடுத்தார் நிதியமைச்சர் நிர்மலா. அதனால் ஒரு பயனும் இல்லை. இப்போது கொரோனாவை வைத்து மக்களுக்கு நிதி கொடுத்து பொருளாதாரத்தை மீட்க நாங்கள் இவ்வளவு செலவு செய்தோம் என பெருமை பேசி, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி குளறுபடிகள், கார்ப்பரேட் வரி தள்ளுபடி, 68000 கோடி கடன் தள்ளுபடி ஆகியவற்றை மறைக்கலாம்.

3. பட்டினி கிடந்த மக்களுக்கு உதவாதது, மாநிலங்களுக்கு நிதி வழங்காதது, புலம்பெயர் தொழிலாளர்களை சாகவிட்டது, ஊரடங்கு நேரத்தில் சூழல் கேடு தரும் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது, புதிய கல்விக் கொள்கை, புதிய மின்சாரக் கொள்கை வெளியிட்டது , டெஸ்ட் கிட் குளறுபடிகள், தொழிலாளர் சட்டங்களில் தளர்வு, கலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு என இன்னும் பல பிரச்னைகளை திசை திருப்பலாம். மற்றொரு வெற்று உரை மூலம் நாட்டையே காப்பாற்றி விட்டதாக மோடி அறிவிக்கலாம்.

பேரிடரில் எப்படி பப்ளிசிட்டி தேடுவது என்பதாகவே இருக்கிறது பிரதமர் மோடியின் அறிவிப்பு. அதைத் தவிர்த்து மக்கள் நலனில் எல்லாம் பா.ஜ.க அரசுக்கு நாட்டம் இல்லை என்பதே கொரோனா நமக்கு மீண்டும் தெளிவுபடுத்தும் உண்மை.

banner

Related Stories

Related Stories