இந்தியா

“15வது நிதிக்குழு இடைக்கால அறிக்கையில் தமிழகத்திற்கு மாபெரும் துரோகம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

"மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதலமைச்சருக்கு வழங்கிட தி.மு.க எம்.பி.,க்கள் தயார்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“15வது நிதிக்குழு இடைக்கால அறிக்கையில் தமிழகத்திற்கு மாபெரும் துரோகம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"15-வது நிதிக்குழு தனது இறுதி அறிக்கையில், மத்திய வரி வருவாய்க்கு அதிக அளவில் பங்களிப்பு செய்யும் தமிழகத்திற்கு அதிக நிதிப் பகிர்வு கிடைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கி, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்பதை நிலைநிறுத்திட வேண்டும்" தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தின் நிதித்தன்னாட்சி உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக - மத்திய வரிகளில் தமிழ்நாட்டிற்கு வெறும் 1,928.56 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. 15-வது நிதிக்குழு அமைக்கப்பட்டதிலிருந்தே - மாநிலங்களுக்குக் கிடைக்கும் நிதிப் பகிர்வினைக் குறைக்கும் விதத்தில் உள்ள “ஆய்வு வரம்புகளை” மாற்றியமைத்திட வேண்டும் என்று நிதிக்குழு முன்பும், மத்திய பா.ஜ.க அரசிடமும் எடுத்து வைத்து திராவிட முன்னேற்றக் கழகம் வாதாடிப் போராடியது.

பிரதமருக்கே நான் நேரடியாகக் கடிதம் எழுதி “2011 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொள்வது” உள்ளிட்ட மாநிலங்களின் நிதி உரிமையை வஞ்சிக்கும் நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளை நீக்க வேண்டும் என்றும், 1971 மக்கள் தொகை அடிப்படையில் நிதிப் பகிர்வினை செய்திட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத பத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி எனது கோரிக்கைக்கு வலுசேர்த்தேன்.

ஆனால் அந்தநேரத்தில் மக்களவையில் 37 உறுப்பினர்கள்- மாநிலங்களவையில் 13 உறுப்பினர்கள் என்று 50 எம்.பி.,க்களுடன் மத்திய அரசுடன் கூட்டணியாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் - எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் - வெறும் கடிதம் எழுதினால் போதும் என்று அமைதி காத்திருந்தார்.

“15வது நிதிக்குழு இடைக்கால அறிக்கையில் தமிழகத்திற்கு மாபெரும் துரோகம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

15-வது நிதிக்குழு ஆய்வு வரம்பு குறித்து விவாதிக்க கேரள அரசு கூட்டிய தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்தார். இதன் விளைவாக - ஐந்தாண்டுகளுக்கு நிதிப் பகிர்வினை அளிக்க வேண்டிய நிதிக்குழு ஒரேயொரு ஆண்டுக்கு மட்டும் (2020-21) நிதிப் பகிர்வினை அளிக்கும் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து - மாநில அரசுகளுக்கு மத்திய வரிகளில் இருந்து பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியினை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகவும் குறைத்துவிட்டது. நிதிப் பகிர்விற்குப் பிறகும் வருவாய்ப் பற்றாக்குறையை சந்திக்கும் 14 மாநிலங்களுக்கு பரிந்துரைத்த மானியத்தில்கூட தமிழ்நாட்டிற்கு வெறும் 4,025 கோடி ரூபாய் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது.

மத்திய வரி வருவாய் தொகுப்பிற்கு தமிழகமோ - தென்னிந்திய மாநிலங்களோ அளிக்கும் பங்களிப்பிற்கு ஏற்றதொரு நிதிப்பகிர்வினை 15-வது நிதிக்குழு பரிந்துரைக்கவில்லை. மாறாக, தென் மாநிலங்கள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வரி வருவாய், வடமாநிலங்களுக்குச் செல்லும் வகையிலேயே இடைக்காலப் பரிந்துரை அமைந்துவிட்டது. அந்த மிக மோசமான பாதிப்பின் எதிரொலியாகவே தற்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 16.02 சதவீதத்தின் அடிப்படையில் 7,376.73 கோடி ரூபாயும், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு 41.85 சதவீத அடிப்படையில் 19,270.4 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்களின் உணர்வுகளை அப்பட்டமாக அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டிற்கு போதிய நிதிப் பகிர்வு அளிக்கப்படாததை அ.தி.மு.க அரசு ஆரம்பத்தில் ஆணித்தரமாக தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை. இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்ட பிறகும் - ஏன், அ.தி.மு.க ஆட்சியில் ரூ.4.56 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாடு கடனில் மூழ்கியுள்ள உள்ள இந்த நிலையிலும், குறைவாக நிதி ஒதுக்கியுள்ளதற்கு நியாயம் தேடவும் முன்வரவில்லை. அந்த அளவிற்கு முதலமைச்சருக்கு “நாற்காலி” முக்கியமே தவிர, “நாட்டின் நலன்” முக்கியமல்ல என்று செயல்பட்டுக் கொண்டு, மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளனர்.

அரசுப் பணத்தில் “விளம்பரப் பிரியராக” எப்படித் தோற்றமளிப்பது என்பது மட்டுமே முதலமைச்சரின் இன்றைய விருப்பமாகவும் தலையாய பணியாகவும் இருக்கிறது!

“15வது நிதிக்குழு இடைக்கால அறிக்கையில் தமிழகத்திற்கு மாபெரும் துரோகம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பொறுப்பற்ற அரசும், கடமையை மறந்த முதலமைச்சரும் இருக்கும் விபரீதத்தால் கொரோனா நோய்த் தொற்றால் மாநிலமே பேரிடரில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் - மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து முறைப்படி கிடைக்கவேண்டிய அதிகப்படியான நிதிகூட கிடைக்காமல் தமிழகம் நிதியுரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது.

ஆகவே, 15-வது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்துள்ள நிதிப் பங்கீட்டில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் துரோகமும், அநீதியும் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் நேரத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வினை மேலும் அதிகரித்து - மத்திய வரி வருவாய்க்கு அதிக அளவில் பங்களிப்பு செய்யும் தமிழகத்திற்கு அதிக நிதிப் பகிர்வு கிடைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை வழங்கி 15-வது நிதிக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்பதை நிலைநிறுத்திட வேண்டும் என்றும், இப்போதாவது தாமதமாகவேனும் விழித்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசுக்கு கொடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதலமைச்சருக்கு வழங்கிட தி.மு.க. எம்.பி.,க்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories