இந்தியா

CAA-வால் மக்கள் ஒடுக்கப்படும் காலத்தில், இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கிய கேரள அரசு!

கேரளத்தில் வீடின்றித் தவிக்கும் மக்களுக்கு கேரள அரசின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

CAA-வால் மக்கள் ஒடுக்கப்படும் காலத்தில், இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கிய கேரள அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், கல்வி மேம்பாடு, இணைய வசதி, பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை, தொழிலாளர் நலன் என ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறது.

குறிப்பாக திட்டங்களை செயல்படுத்துவதற்கென ஒரு துறையை அமைத்து அதை நடைமுறைப்படுத்தும் பணிகளில் முழுவிச்சீல் கேரள அரசு இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட தேர்தல் வாக்குறுதியில் இருந்த பெரும்பாலான திட்டங்களை பினராயி அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயனின் அரசு மாநிலம் தாண்டி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

குடியுரிமை தொடர்பாக பெரும் போராட்டங்கள் நடந்துவரும் காலகட்டம் இது. போராடும் சிறுபான்மையினர் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. சொந்த நாட்டு மக்களையே நாட்டை விட்டுத் துரத்தும் வலதுசாரி பாசிச அரசுக்கு எதிராக 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து குடியமர்த்தப்பட்ட தமிழ் வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடும் நிலமும் வழங்கி அவர்களை பாதுகாப்பதில் கேரள இடதுசாரி அரசு நாட்டிற்கே முன்மாதிரியாக வழிகாட்டியுள்ளது.

CAA-வால் மக்கள் ஒடுக்கப்படும் காலத்தில், இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கிய கேரள அரசு!

இந்தியாவும் இலங்கையும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, இந்தியாவிலிருந்து தமிழ் வம்சாவளியினரை தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் இலங்கையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். இனக்கலவரம் ஏற்பட்டபோது தமிழ் வம்சாவளியினர் தாக்கப்பட்டனர்.

இறுதியாக இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில் தமிழ் வம்சாவளியினர் இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டனர். அவர்களில், திரும்பி வந்தவர்கள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேலையும் வசிப்பிடமும் வழங்கி பாதுகாக்கப்பட்டனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் இவர்கள் இன்றளவும் துயரங்களையே அனுபவித்து வருகின்றனர்.

ஆனால், கேரள மாநிலம் கொல்லத்தில் குடியமர்த்தப்பட்ட 1,400 குடும்பங்கள் திருப்தியுடன் வாழ்ந்து வருகின்றன. தற்போது இவர்களது எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் வேலை உட்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தற்போது அவர்களுக்கு வீடும் நிலமும் வழங்கியுள்ளது.

CAA-வால் மக்கள் ஒடுக்கப்படும் காலத்தில், இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கிய கேரள அரசு!

அவர்கள் மட்டுமின்றி, கேரளத்தில் வீடின்றித் தவிக்கும் மக்களுக்கு கேரள அரசின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஓராண்டு காலமாக நடைபெற்றுவந்த பணிகள் கடந்தவாரத்தில் நிறைவடைந்ததையடுத்து, கட்டிமுடிக்கப்பட்ட 2,14,762 வீடுகளை பினராயி விஜயன், பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதுதொடர்பான நிகழ்ச்சி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் ஒரு வீடு என்பதை கனவு என்று நினைத்தவர்களும், அதைக் கனவு கண்டவர்களுக்கும் இந்த மண்ணில் இன்று அது நனவாகியிருக்கிறது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்தபோது, மக்கள் எழுப்பிய முக்கிய கோரிக்கை சொந்தமாக ஒரு வீடு இல்லை என்பதாகும். இந்த திட்டத்திற்காக மத்திய அரசின் உதவி நாடப்பட்டது. கட்டி முடிக்கப்பட வேண்டிய அனைத்து வீடுகளுக்கும் மக்களின் ஆதரவு இருந்தது. நாடும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்ததால் இது சாத்தியமானது” என்று கூறினார்.

இதுதொடர்பாக பினராயி விஜயனின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான வீடியோவில், “வீடு வழங்கப்பட்டவர்களிடம் சாதியைக் கேட்கவில்லை, மதத்தைக் கேட்கவில்லை, குடியுரிமையைக் கேட்கவில்லை. அவர்களைப் பார்த்தது சகோதாரர்களாகத்தான். தலைசாய்க்க ஒரு இடம் இருக்கிறதா என்று மட்டுமே கேட்கப்பட்டது. இல்லை என்று கூறியவர்கள் அணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் படுத்துக்கொள்ள ஒரு இடம். ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் இந்தச் செயல்பாட்டால் அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். பலரும் அரசிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories