இந்தியா

“பர்தாவை இழுத்து பிறப்புறுப்பில் அடித்தார்கள்” : ஜாமியா போராட்டத்தில் போலிஸ் அராஜகம் - மாணவிகள் புகார்!

போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் பிறப்புறுப்பின் மீது போலிஸார் கொடூரத் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக நேற்றைய தினம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல திட்டமிட்டனர். மாணவர்களின் இந்த பேரணியில் பொதுமக்கள் ஆசிரியர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

பேரணி செல்லவிருந்த மாணவர்களை தடுக்கும் வகையில் போலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு இரும்பு தடுப்புகள் அமைந்திருந்தனர். அப்போது பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் போலிஸாரின் தடுப்புகளை கடக்க முயன்றபோது போலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த போலிஸார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த தாக்குதலின்போது போலிஸார் மாணவர்களையும், மாணவிகளையும் குறிவைத்து தகாத முறையில் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தாக்குதலில் காயமான மாணவி ஒருவர் கூறுகையில், “மாணவர்களும், மாணவிகளும் போலிஸாரின் லத்திகளால் தாக்கப்பட்டனர்.

சில பெண் போலிஸாரின் தாக்குதல் மாணவிகளின் மார்பை குறிவைத்தே இருந்தது. பலருக்கு உள்காயம் ஏற்படுள்ளது. எனது பிறப்புறுப்பு உள்ளிட்ட வெளியில் சொல்லமுடியாத உடல் பாகங்களில் பெண் போலிஸார் லத்தியால் தாக்கியதோடு பூட்ஸ் காலால் எட்டி உதைத்தனர்” என்று அழுதபடி கூறியுள்ளார்.

அதேபோல், ஜாமியா சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு மாணவி ஒருவர் கூறுகையில், “ஒரு பெண் போலிஸார் எனது பர்தாவை இழுத்து பிறப்புறுப்பில் லத்தியால் தாக்கினார். உடலில் பல இடங்களில் கைவைத்து போலிஸார் என்னைப் பிடித்து கீழே தள்ளினார்கள். ஐந்து முறை கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு மிகுந்த சிரமங்களைச் சந்தித்தோம்” எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மாணவர்களை குறிவைத்த போலிஸார், இடுப்புக்குக் கீழே மட்டுமே தாக்கியுள்ளனர். நடந்த சம்பவங்களை வெளியில் விவரிக்க முடியாத வகையில் இந்த தாக்குதலை அவர்கள் மேற்கொண்டதாகவும் மாணவர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமான 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜாமியா சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில மாணவர்களுக்கு கடுமையான உள்காயம் இருப்பதால் அவர்களை அல்ஹிபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் பிறப்புறுப்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலருக்கு உள்காயம் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் என்னவெனில் போராட்டத்தைக் கலைப்பதற்காக டெல்லி போலிஸார் நச்சு வாயுவை காற்றில் கலந்துவிட்டதாகவும் அதனால் மாணவர்கள் பலர் மூச்சுவிடமுடியாமல் அவதி அடைந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. போலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாணவர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories