இந்தியா

’எல்லாச் சாதியிலும் எனக்குச் சொந்தங்கள் உண்டு.. எனக்கு குடியுரிமை இல்லையா? ‘ : ராஜ்கிரண் ஆதங்கம் !

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து நடிகர் ராஜ்கிரண் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

’எல்லாச் சாதியிலும் எனக்குச் சொந்தங்கள் உண்டு.. எனக்கு குடியுரிமை இல்லையா? ‘ : ராஜ்கிரண் ஆதங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும், இதுகுறித்து எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்களின் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இதிலும் பலரும் அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை புறக்கணித்து தங்களின் போராட்டத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின், மூத்த நடிகர் ராஜ்கிரண் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாக புளித்துப்போன விசயம்.

இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும், பாமர மக்களின் மனங்களில் பிரிவினையை உண்டாக்குவதற்கான, நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக விதைத்து வந்தனர், வருகின்றனர்.

’எல்லாச் சாதியிலும் எனக்குச் சொந்தங்கள் உண்டு.. எனக்கு குடியுரிமை இல்லையா? ‘ : ராஜ்கிரண் ஆதங்கம் !

இந்த பொய்ப்பிரச்சாரங்கள் ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது. சத்தியத்தை யாராலும் புதைத்து விட முடியாது. இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள். இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற, இன்ன பிற கொடுமைகளால், அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து, சுய மரியாதையைப்பேணவும், சமத்துவத்தை அனுபவிக்கவும், அதற்கு வழி வகுத்துத்தந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள்.

ஒவ்வொரு மனிதனும், தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது, அவனவனுடைய அடிப்படை சுதந்திரம். இதை "இந்திய அரசியல் சாசன சட்டம்" உறுதி செய்திருக்கிறது. ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லையா, அதே போலத்தான் இதுவும்.

எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே என் தகப்பனாரின் மூதாதையர்கள், சேதுபதிச் சீமையின் மறவர் குலம். என் தாயாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்.

எனது மூதாதையர் காலத்தில், சேதுபதிச்சீமையில், பள்ளு, பறை என்று 18 சாதிகள் இருந்தனவென்றும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி, சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக் கொண்டார்கள் என்றும், என் தாயார் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்.

அதனால், எல்லா சாதியிலும் எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு. பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு. அதில் மனித நேயமே மாண்பு” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories