இந்தியா

“குடியுரிமை மசோதா முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலையும் அவமானத்தையும் அளிக்கிறது” : சு.வெங்கடேசன் ஆவேசம்!

உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் அளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்களவையில் பேசினார்.

“குடியுரிமை மசோதா முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலையும் அவமானத்தையும் அளிக்கிறது” : சு.வெங்கடேசன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கிடையே நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா மீது தொடர்ந்து விவாதம் நடை பெற்றது. அந்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க உறுப்பினர் தயாநிதி மாறன், சிபிஐ(எம்) எம்.பி. சு.வெங்கடேசன், அகில இந்திய முஸ்லிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

அந்த விவாதத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசுகையில், “இந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இந்தியாவை அடுத்த பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்போகிற மிகக்கொடிய சட்டம் இது. ஒரு மதச்சார்பற்ற நாடு, மத அடிப்படையில் குடியுரிமை வழங்க இயலாது. அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தம் இது. இந்தியா இதுவரை கடைப்பிடித்து வந்த மரபுகளுக்கு எதிரானது.

இன்றைக்கும் தமிழ்நாட்டில் 107 முகாம்களில் 59,714 பேர் அகதிகளாக இருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள். எனவே இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி, உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் அளிக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த நாடாளுமன்றத்தில் உள்ள முகப்பில் ஒரு வாக்கியம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் கள் அனைவரும் அந்த வாக்கியத்தைக் கடந்து தான் உள்ளே நுழைகிறோம். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? இந்தியா என்பது மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் இந்தியாவை தங்கள் இல்லமாகக் கருதலாம் என்று அந்த வாக்கியம் சொல்கிறது.

இந்த சட்டத்திருத்தம் நிறை வேறினால், அவர்கள் இந்தியாவை இல்லமாக ஒருபோதும் கருதமாட்டார்கள். அன்பினால் கட்டமைக்கப்பட்ட ஒரு நாட்டை இன்றைக்கு மிக மோசமானதாக மாற்றுகிறீர்கள். உள்துறை அமைச்சர் சொல்கிறார், மக்கள் எங்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள் என்று. ஆளுகிற அதிகாரத்தைத்தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர, இந்தியாவை பிளக்கிற அதிகாரத்தை உங்களுக்கு மக்கள் வழங்கவில்லை என்பதை ஆணித்தரமாக சொல்ல விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories