இந்தியா

கார்பரேட் பூதத்திடம் சிக்கி கண்ணீர் விடும் சில்லறை வியாபாரிகள் : கோடிகளில் புரளும் Amazon, Flipkart !

பண்டிகை கால ஆன்லைன் விற்பனையால் இந்தியாவில் சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கார்பரேட் பூதத்திடம் சிக்கி கண்ணீர் விடும் சில்லறை வியாபாரிகள் :  கோடிகளில் புரளும் Amazon, Flipkart !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆன்லைன் விற்பனை தளங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் கடை விரித்திருந்தாலும், கடந்த ஒரு சில ஆண்டுகளில் அதன் விற்பனை காட்டுத்தீ போல வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

நாட்டின் பொருளாதார மந்த நிலையால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியானாலும், ஆன்லைன் வியாபாரம் இந்தியாவில் தொடர்ந்து சக்கை போட்டு வருகிறது. மக்களை நுகர்வு கலாசாரத்திற்கு அடிமை ஆக்கியதன் விளைவே இந்த விற்பனை உயர்வு என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த தீபாவளியை முன்னிட்டு செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை amazon, Flipkart ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சிறப்பு விற்பனையை நடத்தி மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளது.

இந்த விழாக்கால விற்பனையில், 30 ஆயிரத்துக்கும் மேலான விற்பனையாளர்கள் தங்களது பொருட்களை விற்றுள்ளனர். மேலும், தினந்தோறும் 2 லட்சத்துக்கும் குறையாமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கியுள்ளனர்.

அதிரடியான சலுகைகளுடன் 6 நாட்களுக்கு நடந்த இந்த ஆன்லைன் விற்பனையில் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்கப்பட்டுள்ளது என RedSeer என்ற நிறுவனம் கூறியுள்ளது.

கார்பரேட் பூதத்திடம் சிக்கி கண்ணீர் விடும் சில்லறை வியாபாரிகள் :  கோடிகளில் புரளும் Amazon, Flipkart !

மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நடந்த பண்டிகை கால சிறப்பு விற்பனை ஆன்லைனில் 30% அதிகரித்துள்ளது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது போன்ற ஆன்லைன் விற்பனைகளால், சில்லறை வர்த்தக வியாபாரிகள் பெருமளவு நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதோடு, மோடி அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கையான GST வரி விதிப்பு மற்றும் பணமதிப்பு நீக்கத்தால் சில்லறை வணிகர்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.

இன்னும் அதில் இருந்தே வியாபாரிகள் மீளாத நிலையில், இந்த ஆன்லைன் சிறப்பு விற்பனையால் சிறு, குறு வணிகர்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆன்லைன் விற்பனை முடிந்து ஒரு மாதம் ஆனாலும், பண்டிகை கால விற்பனைக்காக சிறு, குறு வணிகர்கள் வாங்கிய பொருட்கள் இன்றளவும் விற்கப்படாமல் உள்ளது என்றும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கார்பரேட் பூதத்திடம் சிக்கி கண்ணீர் விடும் சில்லறை வியாபாரிகள் :  கோடிகளில் புரளும் Amazon, Flipkart !

இதற்கிடையில், இந்தியா பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்து வரும் வேளையில், வேலைவாய்ப்பு குறைந்து பல்வேறு நிறுவனங்கள் மூடு விழாவைச் சந்தித்து வருகின்றன. இதனால், மொத்த பொருளாதார் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அதேநேரம் ஆன்லைன் விற்பனையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் பாதிக்கப்படாது. தொழிற்நுட்ப வளர்ச்சியின் போது இது போன்ற மாற்றங்களை வியாபாரிகள் உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப தங்களது தொழிலில் புதிய முயற்சிகளை புகுத்த வேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கிராமப்புற மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் இதுபோன்ற வியாபாரத்தை நம்பி வாழும் வணிகர்கள், அவர்களை நம்பி வாழும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். ஆனால், இது குறித்து ஆளும் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்து வருவது அதிருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories