இந்தியா

“மராட்டிய அரசியல் விளையாட்டு - மாபெரும் வெட்கக்கேடு” - மு.க.ஸ்டாலின் வேதனை!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

“மராட்டிய அரசியல் விளையாட்டு - மாபெரும் வெட்கக்கேடு” - மு.க.ஸ்டாலின் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதலமைச்சர் பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. யாரும் ஆட்சியமைக்க முன்வராததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க மும்முரம் காட்டின. அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவுற்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நிலை இருந்தது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன், பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார், தேசியவாத காங்கிரஸுக்கும், மகாராஷ்டிர மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

“மராட்டிய அரசியல் விளையாட்டு - மாபெரும் வெட்கக்கேடு” - மு.க.ஸ்டாலின் வேதனை!

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர அரசியல் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது?

'ஜனநாயகப் படுகொலை' என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ - நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? - பா.ஜ.க சித்து விளையாட்டு என்பதா?

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories