இந்தியா

மராட்டியத்தில் அமைகிறது கூட்டணி ஆட்சி: இறுதியாகிறது ‘குறைந்தபட்ச செயல்திட்டம்’- முக்கிய தலைவர்கள் ஆலோசனை!

குறைந்தபட்ச செயல்திட்டம், எந்தக் கட்சிக்கு என்ன பதவி என்பது எல்லாம் விரைவில் முடிவுக்கு வந்து 20 நாட்களுக்குள் கூட்டணி ஆட்சி அமையும் என தலைவர்கள் நம்புகிறார்கள்.

மராட்டியத்தில் அமைகிறது கூட்டணி ஆட்சி: இறுதியாகிறது ‘குறைந்தபட்ச செயல்திட்டம்’- முக்கிய தலைவர்கள் ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மராட்டியத்தில் அரசியல் குழப்பங்கள் முடிந்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அதிகாரத்தை எப்படிப் பகிர்ந்து கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்விதான் தற்போது முதன்மையாக இருக்கிறது. சிவசேனாவில் உத்தவ் தாக்கரே மட்டும்தான் பதவிகளை முடிவு செய்வார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் யாருக்கு என்ன பதவி என்பதில் பெரும் குழப்பமே நீடிக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 20 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்ட்ரா விவகாரம் குறித்துப் பேசியிருந்தார். அதில் தேர்தல் பிரசாரத்தின் போது தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று பிரச்சாரம் செய்தோம். அப்போது எதிர்ப்பு தெரிவிக்காத சிவசேனா இப்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் "தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடையே பட்னாவிஸ் முதல்வராக தொடர்வார் என்று குறிப்பிடப்பட்டது. நல்லெண்ணத்தின் அடிபடையில் நாங்கள் அதை எதிர்க்கவில்லை. ஆனால், அது எங்களுக்கு சொல்லப்பட்ட செய்தியாக நாங்கள் பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

மராட்டியத்தில் அமைகிறது கூட்டணி ஆட்சி: இறுதியாகிறது ‘குறைந்தபட்ச செயல்திட்டம்’- முக்கிய தலைவர்கள் ஆலோசனை!

அமித்ஷாவின் இந்தப் பேச்சின் காரணமாக தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுக்கும் விதமாக இரண்டு தரப்பிலிருக்கும் முக்கிய தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட படங்களை பகிர்ந்திருந்தனர். குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கும் பணியில் காங்கிரஸ் சார்பாக அசோக் சவான், பிரித்விராஜ் சவான், மாணிக்ராவ் தாக்கரே, பாலசாகேப் தோரட், விஜய் வடேட்டிவர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜெயந்த் பட்டீல், அஜித் பவார், சாகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே மற்றும் நவாப் மாலிக் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைத்து மூன்று கட்சிகளும் முழுமையாக ஆட்சி செய்யமுடியுமா என்ற மிகப்பெரிய கேள்வி தான் நம்முன் இருக்கிறது. இந்தக் கூட்டணி அரசில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி, இஸ்லாமிய மக்களுக்கான இடஒதுக்கீடு, பயிர்க்கடன், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், வேலைவாய்ப்பு ஆகிய வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகிக்கும்.

13-11-2019 : தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைவர்களிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
13-11-2019 : தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைவர்களிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

இது ஒருபுறம் இருந்தாலும், எந்த கட்சிக்கு என்ன பதவி என்பதுதான் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே இடையே நடந்த பேச்சுவார்த்தையில் 5 ஆண்டுகள் சிவசேனா முழுமையாக முதல்வர் பொறுப்பில் இருக்கும் என்றும் துணை முதல்வர் பதவி அஜித் பவாருக்கு வழங்கப்படாத பட்சத்தில், உள்துறை அல்லது நிதி துறை வழங்கப்படலாம்.

காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது நேரடியாக அரசுக்கு ஆதரவு அளிக்கும்படி சிவசேனா வலியுறுத்தி இருக்கிறது. எனில், காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான், மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாசாகேப் தோரட் ஆகியோர் துணை முதல்வர் பதவி கேட்கக்கூடும். அது தரப்படவில்லையென்றால், அவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படலாம். இதில் உடன்பாடு ஏற்படாமல் போனால் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியை வழங்கிவிட்டு, சபாநாயகர் பதவியை தேசியவாத காங்கிரஸுக்கு கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மூன்று கட்சிகளும் தயாரித்த குறைந்தபட்ச செயல்திட்டம் சோனியா காந்தி, சரத்பவார், உத்தவ்தாக்ரே ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது. அதில் எது இறுதியானது என்பதை முடிவு செய்து மக்களின் பார்வைக்கு வெளியிட இருக்கிறார்கள்.

14-11-2019 : சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்களிடையேயான குறைந்தபட்ச செயல்திட்ட உருவாக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம்.
14-11-2019 : சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்களிடையேயான குறைந்தபட்ச செயல்திட்ட உருவாக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம்.

குறைந்தபட்ச செயல்திட்டம், எந்தக் கட்சிக்கு என்ன பதவி என்பது எல்லாம் விரைவில் முடிவுக்கு வந்து 20 நாட்களுக்குள் கூட்டணி ஆட்சி அமையும் என தலைவர்கள் நம்புகிறார்கள். இந்த வார இறுதிக்குள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து கூட்டணி ஆட்சி அமைவது குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories