இந்தியா

சிவசேனாவுக்கு ஆதரவு? : எதிர்க்கும் 2 காங்கிரஸ் தலைவர்கள் - ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மராட்டியம்?

இந்துத்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் சிவசேனாவும், மதச்சார்பின்மை கொள்கை கொண்ட காங்கிரஸும் கூட்டணி வைப்பது சரியான முடிவாக இருக்காது எனவும் மூத்த நிர்வாகிகள் சிலர் கருதுகின்றனர்.

சிவசேனாவுக்கு ஆதரவு? : எதிர்க்கும் 2 காங்கிரஸ் தலைவர்கள் - ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மராட்டியம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் 15 நாட்களுக்கு மேலாக இழுபறி தொடர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுதான், சிவசேனா ஆட்சி அமைக்குமா அல்லது ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்படுமா எனும் மிகப்பெரிய கேள்விக்கு பதிலாக அமையும்.

மகாராஷ்ட்ராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் பதவிக்கான அதிகாரப் பகிர்வுப் போட்டியால் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவிற்கு முழு ஆதரவு அளித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் இன்னும் தங்களது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மராட்டிய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

சிவசேனாவுக்கு ஆதரவு? : எதிர்க்கும் 2 காங்கிரஸ் தலைவர்கள் - ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மராட்டியம்?

சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியால் தற்போது காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தாலும், காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் சிலர் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

கடந்த காலங்களில் சிவசேனா தென்னிந்தியர்கள், இஸ்லாமியர்கள், கம்யூனிஸ்டுகள், பீகாரிகள், வட இந்தியர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி மராட்டிய மாநிலத்திலிருந்து வெளியேற்றி இருக்கிறது. அதுபோக, இந்துத்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் சிவசேனாவும், மதச்சார்பின்மை கொள்கை கொண்ட காங்கிரஸும் கூட்டணி வைப்பது சரியான முடிவாக இருக்காது என மூத்த நிர்வாகிகள் சிலர் கருதுகின்றனர்.

சிவசேனாவை காங்கிரஸ் ஆதரிப்பதற்கு கேரளாவைச் சேர்ந்த மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, கே‌.சி.வேணுகோபால் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மராட்டியத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.‌எல்‌.ஏ-க்கள் சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணியமைக்க வேண்டும் என தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

சிவசேனாவுக்கு ஆதரவு? : எதிர்க்கும் 2 காங்கிரஸ் தலைவர்கள் - ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மராட்டியம்?

சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி முன்னெடுத்த "அவசர நிலை”யை பால் தாக்கரே ஆதரித்ததையும், 2009 காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் பால் தாக்கரே காலமானபோது அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு இரு கட்சிகளுக்குமான இணக்கத்தையும் வலியுறுத்துகின்றனர்.

காங்கிரஸ் தங்களது ஆதரவு நிலையை இன்று அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தருவது குறித்து சரத் பவார் உடன் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பா.ஜ.க-வுக்கும், சிவசேனாவுக்கும் ஆளுநர் தனித்தனியே ஆட்சி அமைக்க காலக்கெடுவோடு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இரு கட்சிகளுக்குமான காலக்கெடுவும் முடிவடைந்திருக்கிறது.

சிவசேனாவுக்கு ஆதரவு? : எதிர்க்கும் 2 காங்கிரஸ் தலைவர்கள் - ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மராட்டியம்?

தற்போது ஆளுநர் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று 2 நாட்கள் காலக்கெடுவுக்குள் தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்குமா அல்லது ஆளுநர் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிடப் போகிறாரா என்ற கேள்வி எழத் தொடங்கி இருப்பதால் மராட்டிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories