
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை இன்று வழங்கியது.
”சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தர பிரதேச அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு தனியாக அறக்கட்டளை உருவாக்கி, நெறிமுறைகளை வகுக்கவேண்டும்.” என அரசியல் சாசன அமர்வு வெளியிட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றனர்.

அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பு, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான சமரச பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரையை ஒத்திருப்பது தெரிய வந்துள்ளது.
நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய அயோத்தி சமசர பேச்சுவார்த்தை குழு பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் சமரச முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, அரசியல் சாசன அமர்வு ஒருபக்கம் விசாரித்து வந்த நிலையில், பேச்சுவார்த்தையும் தொடர்ந்து வந்தது.

சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டவும், கோயிலுக்கு வெளியே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு நிலம் வழங்கலாம் என்றும் சமரச பேச்சுவார்த்தைக் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது. அது அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், இன்று அந்த முடிவே தீர்ப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.








