
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஆனால் மோடி அரசின் ஆதரவாளர்களின் நிறுவனங்கள் மட்டும் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் லாபத்துடன் இயங்கி வருகிறது.
அதன் வெளிப்பாடாகவே முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் சந்தை மதிப்பு ரூ. 9 லட்சம் கோடி ரூபாய் வாருவாய் எட்டியுள்ளது. அதன் மூலம் இந்தியப் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து அதானி என வரிசையாகப் பட்டியல் நீள்கிறது. தற்போது அந்த பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டுகளில் ஜெய் ஷாவின் வருமானம் குறித்த விவரங்களை ஆங்கில பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2016-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் ஜெயின் குசும் ஃபின்சர்வ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளது. அதனால் வங்கியில் வாங்கிய கடனைக் கட்டுவதற்கு தனது இரண்டு சொத்துக்களை அடமானம் வைத்து தனது மகனின் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் கடன் வசதியை அடைக்க அமித் ஷா உதவியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் சட்டம் (எல்.எல்.பி - Limited Liability Partnership Act ) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30க்குள் நிறுவங்கள் தங்கள் கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். மேலும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என உள்ளது.
ஆனால், 2017 - 2018-ம் நிதியாண்டுகளுக்கான நிறுவனத்தின் அறிக்கையை வாங்காமல் காலம் கடத்தி வந்தது. அதனால் பெரும் நிறுவனங்களும் தங்களின் அறிக்கையை தாக்கல் செய்யத் தவறின. அதில் ஜெய் ஷாவின் ஜெயின் குசும் நிறுவனமும் ஒன்று. ஜெயின் குசும் பின்சர்வ் அதன் காலக்கெடுவை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அறிக்கை அளிக்காமல் இருந்ததாகவும் அந்த பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இந்த அசாதாரணமான வருவாய் உயர்வு விவாதத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே முந்தைய இரண்டு ஆண்டுகள் ஆவணங்கள் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2019 ஆகஸ்டில் நிதிநிலை அறிக்கைகள் பதிவேற்றப்பட்டன. நிறுவனம் இப்போது சமீபத்திய நிதியாண்டு வரை இருப்புநிலைகளை தாக்கல் செய்திருந்தாலும், ஆவணங்கள் குசும் ஃபின்சர்வ் வணிகத்தின் தன்மை குறித்து எந்த தெளிவும் அளிக்கவில்லை.
ஆவணங்களில் நிறுவனத்தின் வர்த்தகம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை எனவும், வங்கிகள் உள்ளிட்ட ஏஜென்சிகளிலிருந்து நிறுவனத்துக்கு பெருமளவிலான கடன் கிடைத்துள்ளது எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குசும் ஃபின்சர்வ் நிறுவனம் தெரிவித்த அறிக்கையின் படி, 2013-14 நிதியாண்டில் வெறும் 79.6 லட்சம் ரூபாயாக இருந்த வருவாய் 2018-19ல் ரூ.119.61 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த நிகர மதிப்பு 2015ல் 1.21 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2019-ல் 25.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் பணம், முதலீடு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் சொத்து 2015ல் 37.80 லட்ச ரூபாயாக இருந்தது. 2019ல் 33.43 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் குசும் ஃபின்சர்வ் நிறுவனம் பெற்ற லாபம் கடன் குறித்து தெரிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சிக் காரணமாக ஐந்து ரூபாய் பிஸ்கட் கூட வாங்க இந்திய மக்கள் யோசிப்பதாக பிரிட்டானியா நிறுவன இயக்குநர் தெரிவித்திருந்தார். ஆனால் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு மட்டும் எப்படி உயர்ந்தது என கேள்வி எழுந்துள்ளது.








