இந்தியா

“சாவர்க்கருக்கு மட்டுமல்ல, கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள்”: பாஜக வாக்குறுதிக்கு டி.ராஜா கண்டனம்!

வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதி சிபிஐ பொது செயலாளர் டி.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சாவர்க்கருக்கு மட்டுமல்ல, கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள்”: பாஜக வாக்குறுதிக்கு டி.ராஜா கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என பா.ஜ.க வாக்குறுதி அளித்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே சாவர்க்கருக்கு மட்டும் விருது என்றால், எதிர்ப்பு வந்துவிடும் என்று கருதி, சமூகநீதிப் போராளிகள் ஜோதிபா பூலே, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ.க-வின் இந்த தேர்தல் அறிக்கையை, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் வரவேற்றாலும், மறுபுறத்தில் கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா அந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “மகாத்மா காந்திஜியின் 150வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். இந்தவேளையில், அவரது படுகொலைக்கு காரணமான ஒரு குற்றவாளிகளில் ஒருவரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க கோருவது என்பது மிகப்பெரிய முரணாகும். இதனை நாம் எதிர்க்க வேண்டும்.

“சாவர்க்கருக்கு மட்டுமல்ல, கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள்”: பாஜக வாக்குறுதிக்கு டி.ராஜா கண்டனம்!

பா.ஜ.க சாவர்க்கரை தொடர்ந்து, காந்தியைக் கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க அறிவிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரல்” என கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மக்களை மத ரீதியாக துண்டாடும் இந்துத்துவா விஷவிதையை, நாட்டில் விதைத்த பிளவுவாதி. இப்படிப்பட்ட ஒருவருக்கு பாரத ரத்னா விருது தருவதா? என்று சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விடுதலைப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, நாட்டையே காட்டிக் கொடுத்தவர் வி.டி. சாவர்க்கர். இந்து மகா சபையின் தலைவரான அவர், மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து தப்பித்தவர்.

banner

Related Stories

Related Stories