இந்தியா

’சினிமா வசூல் கணக்கை வைத்து பொருளாதாரத்தை கணக்கிடுவது தவறு’ - ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்

திரைத்துறையின் வருமானத்தை வைத்து பொருளாதார மந்தநிலை இல்லை எனக் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தற்போது தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளார்.

’சினிமா வசூல் கணக்கை வைத்து பொருளாதாரத்தை கணக்கிடுவது தவறு’ - ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மோசமான நிதிநிலை நெருக்கடியில் நாடு சிக்கித் தவிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாகத் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும், அதில், உற்பத்தி துறையிலும், வேளாண் துறையிலும் ஏற்பட்ட சரிவே, சமீபத்திய மந்த நிலைக்கு காரணம் என மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இந்நிலையில், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்தியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை விலக்கிக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மும்பையில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார். அப்போது பொருளாதார மந்தநிலை தொடர்பான கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், “அக்டோபர் 2-ம் தேதி வெளியான 3 திரைப்படங்களும் முதல் நாளில் மொத்தம் ரூ.120 கோடி வசூலித்துள்ளது. 3 திரைப்படங்களுக்கு ரூ.120 கோடி ஒரே நாளில் வசூலாகும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும் இந்தியாவில் மந்தநிலையே இல்லை” என்று கூறியுள்ளார்.

அவரின் இந்த பேச்சு கடும் விமர்சனங்கள் உண்டானது. உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்து எந்த ஒரு தெளிவும் இல்லாமல் மத்திய அமைச்சர் பேசி வருவதாக விமர்சனம் எழுந்தது. இதனிடையே, தான் பேசிய இந்த குறிப்பிட்ட விஷயத்தைத் திரும்பப் பெறுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த அக்டோபர் 13-ம் தேதி மும்பையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது மூன்று படங்கள் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்த விஷயம் உண்மைதான்” என்றார்.

அதனால், திரைத்துறையில் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்பு ஏற்படுவதாகவும், வரி விசயத்தில் குறிப்பிட்ட பங்கினைத் தருவதில் திரைத்துறை உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், “நான் பொருளாதாரத்தில் மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக் குறித்து தான் பேசினேன். ஆனால் அது தற்போது, குறிப்பிட்ட வசூல் விசயம் குறித்து நான் பேசியது வேறு விதமாகப் பகிர்கிறது. அதனால் நான் எனது கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பா.ஜ.க அமைச்சர்கள் இப்படி தவறான புள்ளிவிபரங்களோடு பேசி வருவது மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories