இந்தியா

“சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர்தான் மகராஷ்டிர முதல்வர்” : பா.ஜ.கவுக்கு உத்தவ் தாக்கரே சவால் - பின்னணி என்ன?

மகராஷ்டிரா மாநிலத்திற்கு சிவசேனாவில் இருந்து ஒருவரை முதல்வராக்கிக் காட்டுவேன் என உத்தவ் தாக்கரே அதிரடியாக அறிவித்துள்ளார்.

“சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர்தான் மகராஷ்டிர முதல்வர்” : பா.ஜ.கவுக்கு  உத்தவ் தாக்கரே சவால் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

மகராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, வருகிற 21ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றியது. தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.கவுக்கு வெளியில் இருந்து சிவசேனா ஆதரவு தெரிவித்திருந்தது.

இருப்பினும், பல்வேறு சூழல்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசையும், மாநில அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தது.

“சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர்தான் மகராஷ்டிர முதல்வர்” : பா.ஜ.கவுக்கு  உத்தவ் தாக்கரே சவால் - பின்னணி என்ன?

எனினும், நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க - சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

இதற்காக தங்களது தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளன. இதன்படி, பா.ஜ.க 150 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதர கூட்டணி கட்சிகளுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மும்பையின் வோர்லி தொகுதியில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார். சிவசேனா கட்சியின் வரலாற்றில் தாக்கரே குடும்பத்தில் இருந்து நேரடி தேர்தல் அரசியலில் முதன்முறையாக ஆதித்யா களம் இறங்கியுள்ளார்.

இந்த சூழலில், சிவசேனாவைச் சேர்ந்த ஒருவரே வருங்காலத்தில் மகராஷ்டிராவின் முதல்வர் ஆவார் என்று உத்தவ் தாக்கரே அறிவித்திருப்பது கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு உத்தவ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில், சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் முதல்வராக வருவார்.

உத்தவ் தாக்கரே உடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே
உத்தவ் தாக்கரே உடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே

சிவசேனாவை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கி காட்டுவேன் என எனது தந்தை பால் தாக்கரேவிடம் உறுதி அளித்துள்ளேன். அதனைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அதற்கான காலம் விரைவில் வரும் என உறுதி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த தேர்தலின்போது தேசிய அளவில் மோடி அலை வீசியபோதும், மகாராஷ்டிராவில் அதனை நாங்கள் தடுத்தோம். பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும், மக்கள் பாதிக்கப்படும் விஷயம் என்று வந்தால் நாங்கள் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கத் தயங்கமாட்டோம்.

எனது மகன் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதற்காக நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விட மாட்டேன். எப்போதும் தீவிர அரசியலில் தான் நான் இருப்பேன் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மீது சிவசேனாவின் இவ்வாறான பெருங்கோபத்திற்கு பா.ஜ.க சார்பில் கன்கவ்லி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிதேஷ் ரானேதான் காரணம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பா.ஜ.க வேட்பாளர் நிதேஷ் ரானே மகராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகன் ஆவார். இவர் முதலில் சிவசேனாவில் தீவிரமாக இயங்கியவர். கடந்த 2005ம் ஆண்டு சிவசேனாவில் உத்தவ் தாக்கரே செயல்தலைவராக இருந்தபோது அவரை விமர்சனம் செய்தவர் நிதேஷ். இதன் காரணமாக அவர் சிவசேனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரசில் சேர்ந்த நிதேஷ் ரானே கடந்த 2017ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். அவர் தற்போது, கன்கவ்லி தொகுதியில் பா.ஜ வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதற்கு சிவசேனா கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. வேட்பாளர் மாற்றப்படுவார் என எதிர்பார்த்த போது அது நிறைவேறவில்லை. இதன்மூலம் பா.ஜ.க. நிதேஷ் ரானாவை கட்சியின் அடுத்தக்கட்ட முன்னணித் தலைவராக முன்னிறுத்துவது வெட்டவெளிச்சமானது.

நிதேஷ் ரானே
நிதேஷ் ரானே

எனவே, ஆத்திரமடைந்த சிவசேனா, நிதேஷ்க்கு எதிராக தனது கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியே சிவசேனா கட்சி, பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து முதல்வர் பதவி குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

தனது மகனுக்கு முதல்வர் பதவி அளிக்கவேண்டும் என்பதற்காகத்தான் உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது இப்படி இருக்க, சிவசேனாவை சமாதானப்படுத்த, பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறி பா.ஜ.க சமாதானப்படுத்த முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

banner

Related Stories

Related Stories