இந்தியா

அரசை விமர்சித்ததால் பழிவாங்கலா? : மத்திய அரசின் அராஜகத்திற்கு பலியான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி !

சுதந்திரமாக தனது கருத்தைக் கூட தெரிவிக்க முடியவில்லை எனக்கூறி பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசை விமர்சித்ததால் பழிவாங்கலா? : மத்திய அரசின் அராஜகத்திற்கு பலியான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கேரளாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாதன் டாமன்-டையு மற்றும் தாத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கேரள வெள்ளத்தின்போது, தன்னை யாரென்றே அடையாளப்படுத்திக் கொள்ளாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் ஆதரவையும் கவனத்தையும் பெற்றார்.

இந்நிலையில், இவர் கடந்த 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாகத் தெரிவித்தார். உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ''ஜனநாயக நாட்டில் ஒரு மாநிலத்திற்கே தடைவிதித்திருப்பது ஜனநாயக மீறல், அரசின் இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானது.

மக்களுக்காக குரல் கொடுக்க என்னுடைய அதிகாரம் பயன்படும் என நம்பினேன். ஆனால் தற்போது அந்த நம்பிக்கை இல்லை, சுதந்திரமாக என் கருத்தைக் கூட தெரிவிக்க முடியவில்லை. இது சரியல்ல என்று எனக்குத் தெரியும்; இந்தப் பதவியில் நான் இருக்க விரும்பவில்லை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதனின் செயலை சமூகவலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டி வந்த நிலையில், கண்ணன் கோபிநாதன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கோரும் நோட்டீஸை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நோட்டீஸில், கண்ணன் கோபிநாதனின் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கேரள வெள்ளத்தின்போது, அனுமதி பெறாமல் கேரளா சென்றது ஏன்? திரும்பி வந்தபின் அவர் அரசிடம் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கண்ணன் கோபிநாதன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்திருக்கிறார்.

அவர், கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு திரும்பி வந்தபின் தான் கேரளா சென்றிருந்த 8 நாட்களையும் விடுப்பாக சேர்த்துக்கொள்ளுமாறு நிர்வாகத்திடம் கோரியிருக்கிறார். ஆனால், அவர் சமூகத்திற்காகவே உழைத்திருக்கிறார் என்பதால் இதை விடுப்பாகக் கருத வேண்டியதில்லை என நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories