இந்தியா

சத்துணவு எனும் பெயரில் ஒரு சப்பாத்தி, ஒரு சிட்டிகை உப்பு : குழந்தைகளின் உணவிலும் ஊழல் செய்யும் அதிகாரிகள்

உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்துணவு எனும் பெயரில் ஒரு சப்பாத்தி, ஒரு சிட்டிகை உப்பு : குழந்தைகளின் உணவிலும் ஊழல் செய்யும் அதிகாரிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. அங்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய உரிமைகள் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது.

நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. வறுமையின் காரணமாக பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் காக்கவும் தான் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கி வருகின்றனர். ஆனால், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் சத்துணவு திட்டம் மிகமோசமான முறையில் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மிர்சாபூர் பகுதியில் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1 வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இந்தப் பள்ளியில் முறையாக சத்துணவு வழங்குவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த வாரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் மாணவர்களுக்கு சப்பாத்தி ரொட்டியும் அதனைத் தொட்டு சாப்பிடுவதற்கு உப்பும் கொடுத்துள்ளனர். அதனை மாணவர்கள் வரிசையாக தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

இதனைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து, மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஜனநாயக அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில், “உத்தர பிரதேச அரசு மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவில் சாதம், சப்பாத்தி, காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் போன்ற கலோரி உணவு வழங்கப்படுகிறது எனக் கூறுகிறது.

ஆனால், மாணவர்களுக்கு வழங்குவதோ உப்பும், சப்பாத்தி ரொட்டியும் தான். இது மாணவர்களின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே, இதைத் தடுத்து முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மாணவர்களுக்கு தினமும் 450 கலோரி அளவிற்கு சத்துணவு வழங்கவேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளரை இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories