இந்தியா

என்ன நெருக்கடி கொடுத்தாலும் காஷ்மீரில் நடக்கும் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் - பி.பி.சி விளக்கம்

மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் 10 ஆயிரம் முஸ்லீம்கள் ஊர்வலம் நடத்தியதை பி.பி.சி, ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வீடியோ வெளியிட்டன.

என்ன நெருக்கடி கொடுத்தாலும் காஷ்மீரில் நடக்கும் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் - பி.பி.சி விளக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370ஐ ரத்து செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியது. அது மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் “ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019” மசோதாவையும் அராஜகமான முறையில் நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பலத்தை பயன்படுத்தி நிறைவேற்றியது.

முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையே ராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளிச் சிறைச் சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.

மாநிலம் முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதியாகவும், எந்த பிரச்னையும் இன்றி வாழ்வதாக ஒரு பொய்யை பா.ஜ.க தலைவர்கள் சரளமாக பேசிவருகின்றனர். எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மக்களுடன் சகஜமாக சாப்பிடுவது போல், நடிகர்களை வைத்து வீடியோ வெளியிட்டு ஏமாற்றி வருகின்றனர். பா.ஜ.க.,வின் இந்த செயல் சமீபத்தில் ஊடகங்கள் வழியே அம்பலமானது.

வெள்ளியன்று காஷ்மீரில் 10 ஆயிரம் காஷ்மீர் மக்கள் ஒன்று திரண்டு மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்தியதாக பி.பி.சி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வீடியோ வெளியிட்டன. அந்த வீடியோவில், போராடும் மக்கள் மீது ராணுவத்தினர் பெல்லட் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தி கலைக்க முற்படுகின்றனர். ஆனால், காஷ்மீரில் போராட்டம் வெடித்ததாக வெளிவரும் செய்திகள் பொய் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பி.பி.சி பத்திரிக்கையாளர் அமீர் பிர்ஸாடா காஷ்மீரில் இருந்து மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமைதியாக நடத்திய போராட்டத்தில் தீடிரென வன்முறை வெடித்தது. பாதுகாப்பு படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக தெரிவித்தார் அமீர்.

இந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது மத்திய அரசு. ஸ்ரீநகர் காவல்துறை ஆணையர் கடந்த 6 நாட்களில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு கூட வெளியேறவில்லை என தெரிவித்தார். இதனால், பி.பி.சி வெளியிட்ட வீடியோ பொய் என பா.ஜ.க.வினர் தெரிவித்து வந்தனர். திட்டமிட்டு பி.பி.சிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டது. தங்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதை அறிந்த பி.பி.சி, தனது நிலைபாட்டை தெரிவித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பி.பி.சியின் அந்த விளக்கத்தில் " காஷ்மீரில் நடைபெறும் நிகழ்வுகளை நாங்கள் தவறாக சித்தரித்தோம் என்ற கூற்றை கடுமையாக மறுக்கிறோம். அங்குள்ள நிலைமையை பாரபட்சமின்றி துல்லியமாக எடுத்துரைக்கிறோம். மற்ற செய்தி நிறுவனங்களைப் போலவே நாங்களும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது செயல்பட்டு வருகிறோம். இருப்பினும், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து தெரிவிப்போம்'' எனத் தெரிவித்துள்ளது.

தங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்கும் காஷ்மீரிகளை துப்பாக்கிகள் கொண்டு முடக்கி வைத்திருக்கிறது மத்திய அரசு. உண்மையை வெளிக் கொண்டு வர விரும்பும் ஊடகங்களின் குரல்களை நெறிக்கும் முயற்சிகளும் நடக்கிறது. அதை மீறியும் செய்தி வெளியிட்டால், அந்த தகவலில் உண்மையில்லை என்று, தங்கள் ஆயுதமான போலிச் செய்திகளை பரப்புகின்றனர். ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை எத்தனை பேர் பலியாகியிருக்கிறார்கள், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற தகவல் தெரியவில்லை. விரைவில் உண்மை வெளியில் வரும்.

banner

Related Stories

Related Stories