இந்தியா

ரத்தான தபால் தேர்வுக்கு மறு தேதி... மாநில மொழிகளிலும் வினாக்கள் :மத்திய அரசு அறிவிப்பு!

ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என்றும் தமிழ் மொழியில் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரத்தான தபால் தேர்வுக்கு மறு தேதி... மாநில மொழிகளிலும் வினாக்கள் :மத்திய அரசு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தபால் துறையில் நாடு முழுவதுமுள்ள அஞ்சலகர் உள்ளிட்ட 3 பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 14ம் தேதி நாடு முழுவதும் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் பிராந்திய மொழிகளில் வினாத்தாள் இடம்பெறாமல் வெறும் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே இடம்பெற்றது. தமிழ் மொழி உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதனால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டனர்.

அஞ்சலக தேர்வில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழ் மொழி ஆர்வலர்களும், வல்லுநர்களும் அரசுத் தேர்வில் செம்மொழியான தமிழ் மொழி இடம்பெறாததற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இது தொடர்பான எதிர்ப்பு நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனையடுத்து தபால் துறை தேர்வில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என்றும், நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வாய்மொழியாகத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. எழிலரசன் தொடர்ந்த வழக்கில் அரசு தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் இடம்பெறுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசின் தேர்வு ரத்து அறிவிப்பு நகல் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இதனையடுத்து தபால் துறை தேர்வுகள் மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்றும், ரத்து செய்யப்பட்ட தேர்வு வருகிற செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories