இந்தியா

வங்கிகளில் முறைகேடு செய்துவிட்டு தலைமறைவானவர்கள் யார்? : ஆர்.டி.ஐ-க்கு பதிலளிக்க சி.பி.ஐ மறுப்பு!

வங்கிகளில் முறைகேடு செய்துவிட்டு, தலைமறைவாக இருப்பவர்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு, கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ மறுத்துள்ளது.

வங்கிகளில் முறைகேடு செய்துவிட்டு தலைமறைவானவர்கள் யார்? : ஆர்.டி.ஐ-க்கு பதிலளிக்க சி.பி.ஐ மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வங்கிகளில் முறைகேடு செய்துவிட்டு, தலைமறைவாக இருப்பவர்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ மறுத்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் விஹார் துர்வே என்பவர், வங்கிகளில் நிதி முறைகேடு செய்து தலைமறைவாக இருப்பவர்களின் விவரங்களைக் கேட்டு சி.பி.ஐ-யிடம் மனு தாக்கல் செய்தார். அதில், 2014-2019 வரை வங்கிகளை ஏமாற்றியவர்களில் யாருக்கெல்லாம் சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது? அதன் மூலம் கிடைத்த பதில்கள் என்ன ஆகிய விவரங்களைக் கேட்டிருந்தார்.

அவரது மனுவுக்கு பதிலளித்துள்ள சி.பி.ஐ, நிதி முறைகேடு செய்தவர்கள் குறித்த விவரத்தையும், அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விவரங்களையும் வெளியிடமுடியாது. அவ்வாறு வழங்கினால், நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்படும். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ விசாரணையின் கீழ் இருக்கும் விபரத்தை பகிர முடியாது எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த விவரங்களைக் கேட்டு, நிதியமைச்சகத்திடம் விண்ணப்பித்த போது, அந்த மனு தங்கள் அதிகார எல்லைக்குள் வரவில்லை எனக் கூறி வெளியுறவுத் துறைக்கு மாற்றியது. வெளியுறவுத் துறையும் இதற்கான பதிலை தெரிவிக்கமுடியாது என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மே மாதம், மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு பதில் அளித்தது. அதில் நிதி முறைகேடு செய்து தலைமறைவாக இருப்போர் பட்டியலில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, ஜதின் மேத்தா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல உண்மைகள் அம்பலமாகி வந்தன. ஆனால், ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்தில் தகவல் ஆணையத்தின் அதிகார வரம்புகளைக் குறைத்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம், தனி மனிதர்களின் தகவல் பெறும் உரிமைகள் கட்டுப்படுத்தப்படும் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

banner

Related Stories

Related Stories