இந்தியா

‘தெலங்கானா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது’ - காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ரெட்டி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயபால் ரெட்டி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘தெலங்கானா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது’ - காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ரெட்டி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயபால் ரெட்டி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயபால் ரெட்டி கடந்த 1942ம் ஆண்டு பிறந்த இவர், ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார். அதன் பின் அரசியலில் ஆர்வம் செலுத்திய அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1970 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்வானார்.

அதன் பின்னர் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் மற்றும் டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோர் அமைச்சரவையில் அறிவியல் தொழில்நுட்பத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் தொடர்புத்துறை, பெட்ரோலியத்துறை என்று பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட பணியாற்றியவர். அவரின் இந்த மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

மேலும் ஜெயபால் ரெட்டி மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஸ்ரீ ஜெய்பால் ரெட்டி கருவின் மறைவிற்கு மிகுந்த வருத்தம் அடைகிறேன்.

அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், தெலங்கானாவின் சிறந்த மகன், அவர் தனது முழு வாழ்க்கையையும் பொது சேவைக்காக அர்ப்பணித்தார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெய்பால் ரெட்டியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கள் செய்தி குறிப்பில், “நாடு ஒரு பழுத்த நாடாளுமன்றவாதியை இழந்திருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கம் சிறந்த தலைவரைப் பறிகொடுத்திருக்கிறது.

இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் வழிகாட்டக்கூடிய வித்தில் செயல்பட்டு - இரு அவைகளிலும் என்றும் குறையாத புகழ் பெற்றுள்ள ஜெயபால் ரெட்டியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் இரங்கள் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “அவருடன் பழகிய நாட்கள் மனதுக்கு மிகவும் ரம்மியமானவை; பசுமையானவை. அவரது மறைவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பேரிழப்பாகும்.

அவரது துணைவியாருக்கும், அவரது இரண்டு புதல்வர்கள், புதல்விக்கும், குடும்பத்தினருக்கும், பேரப் பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை மிகுந்த துக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories