இந்தியா

“அது நடக்கலைனா.. 24 மணிநேரத்தில் கட்சி உடையும்” : எச்சரிக்கும் காங்கிரஸ் தலைவர் - தொண்டர்கள் குழப்பம்

“காந்தி குடும்பம் அல்லாமல் வேறு யார் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றாலும் அடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி உடைந்துவிடும்” என எச்சரித்துள்ளார் நட்வர் சிங்.

“அது நடக்கலைனா.. 24 மணிநேரத்தில் கட்சி உடையும்” : எச்சரிக்கும் காங்கிரஸ் தலைவர் - தொண்டர்கள் குழப்பம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற படுகொலைச் சம்பவ விவகாரத்தில் பிரியங்கா காந்தி மேற்கொண்ட துணிச்சலான செயல்பாடுகள் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸின் புதிய தலைவராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராகுலின் ராஜினாமாவை முதலில் ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவியில் நீடிக்குமாறு அவரிடம் வலியுறுத்தினர்.

ஆனால், ராகுல் தனது முடிவில் உறுதியாக இருந்துவருகிறார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்த அவர், தனது குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பொறுப்புக்கு வரமாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் ஏற்பட்ட நிலப் பிரச்னை தொடர்பான மோதலில் கிராமத் தலைவர் யக்தா தத்தின் ஆட்கள் 10 பழங்குடியினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மேலும், 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“அது நடக்கலைனா.. 24 மணிநேரத்தில் கட்சி உடையும்” : எச்சரிக்கும் காங்கிரஸ் தலைவர் - தொண்டர்கள் குழப்பம்

உத்தர பிரதேச கிழக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார். அவர் அனுமதிக்கப்படாததால் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் கவனம் பெற்றது.

இதனால், தற்போது காங்கிரஸ் கட்சியில், பிரியங்கா காந்தி தலைவராக வேண்டும் எனக் குரல்கள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனான அனில் சாஸ்திரி, “பிரியங்கா கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும். வேறு யார் அந்தப் பதவிக்கு வந்தாலும் அவரைக் கட்சியினர் 100% ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

“அது நடக்கலைனா.. 24 மணிநேரத்தில் கட்சி உடையும்” : எச்சரிக்கும் காங்கிரஸ் தலைவர் - தொண்டர்கள் குழப்பம்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நட்வர் சிங், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி செயல்பட்டதை நாம் அனைவரும் பார்த்தோம். அவர் அங்கு காத்திருந்து சாதித்தார். ராகுல் காந்தி, அவரது குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு வரமாட்டார்கள் என்று தெரிவித்தார். இனி அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “காந்தி குடும்பம் அல்லாமல் வேறு யார் காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்றாலும் அடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி உடைந்துவிடும்” என எச்சரித்துள்ளார் நட்வர் சிங்.

காங்கிரஸை காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதே பெரும்பாலான காங்கிரஸாரின் நிலைப்பாடு. வேறு யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும், மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தி உண்டாகக்கூடும் எனும் கருத்து நிலவுகிறது. இந்நிலையில், பிரியங்காவுக்கு வலுத்திருக்கும் ஆதரவு அவர் தலைமைப் பதவியேற்பதற்கான காலம் நெருங்கிவிட்டதையே காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories