இந்தியா

ஒடிசாவில் கரையை கடந்தது ஃபானி புயல்!மேற்கு வங்கம் நோக்கி நகர்கிறது!

ஒடிசாவில் மணிக்கு 240 கி.மீட்டருக்கு மேல் பலத்த காற்று வீசிய நிலையில் ஃபானி புயல் இன்று கரையை கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி செல்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் கரையை கடந்தது ஃபானி புயல்!மேற்கு வங்கம் நோக்கி நகர்கிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது தீவிர புயலாக உருவெடுத்தது. ஃபானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அது உச்ச உயர் தீவிர புயலாக மாறி ஒடிசாவை நோக்கி சென்றது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காலை 8 மணி அளவில் ஒடிசா கடற்கரையை நெருங்கியது. 8.30 மணி அளவில் புயல் கண்ணின் ஒரு பகுதி பூரி கடற்கரையைத் தொட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கண்பகுதி கரையை கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதி தீவிர புயல் என்பதால், புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக கடந்த 24 மணி நேரத்தில் கஜபதி, கஞ்சம், கட்டாக், ஜகத்சிங்பூர் ஆகிய 14 மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு தயார் செய்வதற்காக 5 ஆயிரம் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புவனேஸ்வரத்தில் இன்று நள்ளிரவு வரை விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டன. வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

புயலால் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை சீர்செய்யும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது. தற்போது ஃபானி புயல், வடக்கு - வடகிழக்கே, மேற்கு வங்கம் நோக்கி நகர்கிறது. அதன் பிறகு வங்கதேசத்தில் கரையைக் கடந்து வலுவிழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்றதொரு அதி தீவிர புயல் 1999ஆம் ஆண்டில் ஒடிசாவைத் தாக்கியது. அப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories