திமுக அரசு

”முடிந்தது அடிமையிருள்; விடிந்தது தமிழ்நாடு” : 16 அடி பாயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் இதுதான்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்திய ஜனநாயக வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தலைவர் வாய்த்தது இல்லை.

”முடிந்தது அடிமையிருள்; விடிந்தது தமிழ்நாடு” : 16 அடி பாயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘விடியலை நோக்கி...’ என்கிற முழக்கத்தோடுதான் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2021 தேர்தலை எதிர்கொண்டது தி.மு.கழகம். ஏன் விடியலை நோக்கி முழங்கினோம்? கடந்த பத்தாண்டு கால இருளை அகற்றி நாட்டு மக்களுக்கு ஒளிக்கீற்றை, வெளிச்சத்தைக் காட்ட வேண்டும் என்றால் விடியலை நோக்கித்தான் நாம் முன்னேறியாக வேண்டும். மிகச் சாதாரணமாக கடந்தகால தி.மு.க. அரசை விமர்சனம் செய்பவர்கள் பொதுவாகச் சொல்வது தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் இருக்காது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்காது. தி.மு.க. ஆட்சியில் பணப்புழக்கம் இருக்காது. இவையெல்லாம் உண்மையா? இல்லை! எதுவுமே உண்மை இல்லை. எல்லாம் இட்டுகட்டிய பொய்கள்.

ஒரு வீடு இருக்கிறது. சாதாரண கூலிக்காரர் குடும்பம் அங்கே மூத்த பிள்ளை ஒரு பக்குவத்திற்கு வருகிறபோது இரண்டாவது குழந்தை பிறந்திருக்கும். இப்போது பெற்றவர்கள் இரண்டு பேரும் வேலை செய்யப்போக வேண்டுமானால், குழந்தையைப் பாதுகாக்கிற பொறுப்பு மூத்த பிள்ளையின் தலையிலே விழுந்துவிடும். குடும்பச் சூழல் கருதி இரண்டாவது குழந்தையை பாதுகாப்பது மட்டுமல்ல, அதைப் பராமரிப்பதும் முதல் குழந்தையின் பொறுப்பாகிவிடும். பெரும்பாலான அன்றாடங்காய்ச்சிகளின் வீடுகளில் முதல் குழந்தை இரண்டு மூன்றாவது குழந்தைகளுக்கு ஓர் ஆயாவாகவே இருக்கும். இதனாலேயே முதல் குழந்தை அந்த வயதுக்கு உரிய எந்தச் சுகத்தையும் அனுபவித்திருக்காது. சக வயது குழந்தைகளோடு விளையாட, பெற்றோரின் அன்பை, அரவணைப்பைப்பெற, உரிய வயதில் கல்வி பெற, விரும்பியதைச் சாப்பிட என எந்த வாய்ப்பும் அற்றே வளரும். வளர்ந்து ஓரளவுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் குடும்பத்தின் பொருளாதார சுமையைத் தாங்க பெற்றோருடன் வேலைக்குச் செல்லத் தொடங்கும்.

இப்போது இரண்டாவது மூன்றாவது குழந்தைகளுக்குச் கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கும். அவை விளையாடும், உரிய வயதில் பள்ளிக்குப் போகும். கல்வி கற்று வளமான வாழ்வை அமைத்துக் கொள்ளும். பல வீடுகளில் முதல் குழந்தையின் தியாகம் வெளியே தெரியாது. ஆனால் அடுத்த குழந்தைகளின் வளமான வாழ்வு மட்டுமே பெரிதாகப் பேசப்படும். எல்லோராலும் கொண்டாடப்படும். அந்த மகிழ்ச்சியின் பின்னணியில் முதல் குழந்தையின் வாழ்க்கையைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். வேண்டுமானால் படிப்பில்லாத, பெற்றோரைப் போலவே கடின உழைப்பில் தொலைக்கப்பட்டுவிட்ட அதன் வாழ்வைக் குறை சொல்வார்கள். இந்த முதல் குழந்தைதான் தி.மு.க.ஆட்சி. கலைஞரின் ஆட்சி. அரசு, ஆட்சி அதிகாரத்தின் எந்தச் சுகமும் வளமும் தெரியாமல், காடாய், கரம்பாய், கரடு, முரடாய்க் கிடந்த நம் வாழ்வை சீர்படுத்த நேர்படுத்த திட்டங்களையும் சட்டங்களையும் போட்டு, கால நேரம் பாராமல் உழைத்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல கலைஞரும், தி.மு.க. அரசும் பட்டபாடு கொஞ்சமல்ல.

”முடிந்தது அடிமையிருள்; விடிந்தது தமிழ்நாடு” : 16 அடி பாயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் இதுதான்!

1967ஆம் ஆண்டு மிகப் பெரிய ஆரவாரத்தோடும் எதிர்பார்ப்போடும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா தலைமையில் தி.மு.க. அரசு அமைந்தது. இந்திய வரலாற்றில் இருபெரும் அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியது திராவிட இயக்கம். காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைக்கான முழக்கம் ஓங்கி முழங்கி விடுதலைக்கனல் மூண்டெரிந்து கொண்டிருந்தபோது சுயராச்சியம் வருவதற்கு முன் சுயமரியாதை வேண்டும் என்று குரல் எழுப்பியது தமிழ்நாடு. காரணம் திராவிடஇயக்கம்.1921ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு துணைக் கண்டம் முழுவதும் பொதுத்தேர்தலை நடத்தியது. தேர்தலைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தாலும் வட நாடுகளில் எல்லாம் காங்கிரஸ் தயவிலான பினாமி கட்சிகளே வெற்றி பெற்றன. சென்னை மாகாணத்தில் மட்டும்தான் காங்கிரஸ் அல்லாத நீதிக்கட்சி வெற்றி பெற்றது. இதேபோல சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக 1967 ஆம் ஆண்டு மாநிலக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தமிழ்நாட்டில்தான் அண்ணா தலைமையிலான தி.மு.க.அரசு. நீதிக்கட்சியின் வழித்தோன்றல் அரசு அமைந்தது.

இந்த வரலாற்றுப் பெருமைக்குரிய திராவிட இயக்கத்தின் மூன்றாம் தலைமுறை தலைமையை ஏற்றவர் கலைஞர். 1969ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நம்மை விட்டுப் பிரிந்தபோது, இனி தமிழ்நாட்டிற்கும் தி.மு.கவிற்கும் யார் இருக்கிறார் தலைமை தாங்க? இனி தமிழ்நாட்டின் கதி என்னாவது? என்கிற கேள்விகள் இந்தியா முழுவதுமே எழுந்தன. பலரது கேள்விகள் கவலை தோய்ந்தும் பலரது கேள்விகள் மகிழ்ச்சியில் திளைத்தும் இருந்தன. ஆனால், எல்லோருடைய புருவங்களையும் வியப்பில் ஆழ்த்தி தி.மு.க. தன் தலைவரைத் தேர்வு செய்தது. தமிழ்நாட்டிற்கு ஒரு தலைவனைப் படைத்தளித்தது. அவர்தான் கலைஞர். 1969ஆம் ஆண்டு கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பின்னர் தி.மு.கழகத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை வெறும் 10 விழுக்காடு. வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோரின் பங்கேற்பு 25 விழுக்காட்டிற்குள். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு பின் தங்கி இருந்தது.

தனிநபர் வருவாயில் பல மாநிலங்களுக்குக் கீழே இருந்தது. உள்கட்டமைப்பில் மோசமாக இருந்தது. 1967 & 71, 71 & 76, 89 & 91, 96 & 2001, 2006 & 2011 என ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் 19 ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றினார். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் பல சாதனைகளின் தலைமகனாக கலைஞர் இன்றைக்கும் விளங்குகிறார். 1957இல் தொடங்கி 2018 வரை 60 ஆண்டுகள் வரை சட்டமன்ற உறுப்பினர். 13 பொதுத் தேர்தல்களைச் சந்தித்து தோல்வியே காணாத தலைவர். 50 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சியின் தலைவராக இருந்து வழி நடத்தியவர். 19 ஆண்டுகள் என்கிற அதிக காலம் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஆளுங்கட்சியை நேர்படுத்தியவர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்திய ஜனநாயக வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தலைவர் வாய்த்தது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மாநிலக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இந்திய ஒன்றிய அரசில் ஐந்து முறை ஜனநாயக ரீதியிலான அரசு அமைய பெரும் பங்காற்றியவர். ஏழு பிரதமர்களை தீர்மானிக்கிற சக்தியாக விளங்கியவர். இவையெல்லாம் கலைஞரின் ஆளுமைகள்.

”முடிந்தது அடிமையிருள்; விடிந்தது தமிழ்நாடு” : 16 அடி பாயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் இதுதான்!

ஆனால், இவைகள் அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டில் 19 ஆண்டுகால ஆட்சியில் கலைஞர் சாதித்த சாதனைகள்தான் வரலாற்றின் தலைப்புச்செய்திகள். உயர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் இந்தியாவின் முதன்மை இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் விரல் பிடித்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். உள் கட்டமைப்பில் சுய சார்பில் தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட்டுப் பேசுமளவு உயர்த்தி வைத்தார். இவைதான் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு தமிழ்நாட்டின் பேசுபொருள். இந்தக் கலைஞரை, இந்தத் தி.மு.க.வை ஏன் புரளி பேசுகிறார்கள். அன்றாடங்காய்ச்சி குடும்பத்தின் மூத்த பிள்ளை நிலைதான் கலைஞரின் நிலையும். பேருந்துகளை எல்லாம் நாட்டுடமை ஆக்கி, விவசாய நிலங்களை எல்லாம் பிரித்துக் கொடுத்து, கைரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கி, குடிசை வீடுகளை அடுக்கு மாடி வீடுகளாக்கி, தெரு விளக்கு, குடிநீர் வசதி செய்து, மின் உற்பத்திக்குத் திட்டங்கள் தீட்டி, தொழில் முதலீட்டை வேலைவாய்ப்பை அதிகரித்து எல்லா நிலையிலும் நாட்டையும் மக்களையும் முன்னோக்கி நகர்த்தி வியர்வை துடைப்பார் கலைஞர். மேக்கப் கலையாமல் மேடையில் நடித்து யாராவது வந்து இடையிலே ஆட்சியைப் பிடிப்பார்கள். மொத்த நிர்வாகமும் சீரழியும். மீண்டும் கலைஞர் வருவார். சீரழிவுகளை எல்லாம் சரி செய்து தலை நிமிர்த்துவார். டில்லியில் இருப்போருக்கு அடி வயிறு கலக்கும். ஆட்சியைக் கலைப்பார்கள். மீண்டும் அரிதாரங்கள், அடிமைகள் அரியணை ஏறும், அழிச்சாட்டியம் செய்து வளர்ச்சியை முன்னேற்றத்தைக் கீழே கொட்டிக்கவிழ்த்து விடுவார்கள்.

இப்போது, கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது கவிழ்ந்து கிடந்த இருள் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை, வேலைவாய்ப்பைப் பறித்தது. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைச் சூறையாடியது. தமிழ்நாட்டின் வளமான முன்னேற்றத்தைச் சீர்குலைத்தது. இந்த இருளில் இருந்து விடுபட, நாட்டையும் மக்களையும் மீட்கத்தான் ‘விடியலை நோக்கி’ என்கிற முழக்கத்தை முன்னெடுத்தார் மு.க.ஸ்டாலின். தந்தையின் வலியுணர்ந்த தாய்நாட்டின் நிலையறிந்த பிள்ளை. கொள்கையையும், அதன் நோக்கத்தையும், தேவையையும் தம்தேர்ந்த அறிவால், அனுபவத்தால் பாடமாய்ப் படித்துத் தேறிய தலைவர். எவ்வளவு இழி சொற்கள், அவமதிப்புகள், அவதூறுகள், ஏளனங்கள்! ஆனால் ஒன்றுக்கும் சலனப்படாமல், பதறாமல் இலக்கில் கவனமாய், அண்ணா சொன்னது போல் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து அதுவும் அளந்து வைத்து இனி எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில், எட்டிவிட முடியாத உயரத்தில் நின்றபடி நிதானமாக, தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் என்பதுபோல, சமன் செய்ய முடியாத கலைஞரின் சாதனைகளை அதன் வடிவமும், உள்ளடக்கமும் மாறாமல் நிகழ்காலத் தேவைக்கு ஏற்ற வீரியம் கூட்டி முன்னைவிட வேகமாக, விவேகமாக அதே நேரம் தெளிவாகவும், துணிவாகவும் முன்னெடுக்கிறார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அமெரிக்க டாலர் மதிப்பில் 26 பில்லியன் அளவாக இருக்கிற தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவை 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக அறிவித்திருக்கிறார்.

‘ஏற்றுமதியில் ஏற்றம் & முன்னணியில் தமிழ்நாடு’ இதுதான் கடந்த செப்டம்பர் 22ஆம் நாள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொழில் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மாநாட்டின் முழக்கம். செப்டம்பர் 20 & 26 நாட்களை வர்த்தகம் மற்றும் வணிக வாரமாகக் கடைப்பிடிக்க 75ஆவது விடுதலை நாளையொட்டி ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த மாநாட்டை பொருள் பொதிந்த நிகழ்வாக நடத்திக் காட்டியது திராவிட முன்னேற்ற கழக அரசு. 24 திட்டங்களுக்கானபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் முதலீட்டு மதிப்பு 2120.54 கோடிகள். சென்னையிலிருந்து நெல்லை வரைக்கும் பல்வேறு மாவட்டங்களும் பயன்பெறும் வகையிலான இந்தப் புதிய முதலீட்டுத் திட்டங்களால் ஏறக்குறைய 50 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள். இலக்கிய காலத்திலேயே பாய்மரக் கப்பலில் கடல் கடந்து போய் வாணிபம் செய்து பொருளீட்டியவர்களல்லவா நமது முன்னோர். இன்றைக்கு உள்ளங்கையில் உலகம் சுழலுகிற அறிவியல் உலகத்தில் தமிழ்நாடு பின் தங்கியிருக்கலாமா? அடிமைகளின் ஆட்சி முடிவுக்கு வந்தவுட னேயே, தமிழ்நாட்டை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அரங்கின் உயரத்திற்கு உயர்த்திக் காட்டும் நோக்கோடு, முதலமைச்சர் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு, பொருளாதார ஆலோசனைக்குழு என்கிற இரண்டு குழுக்களை அமைத்தார். பொருளாதார வல்லுநர்கள், பேராசிரியர்கள், அறிவுசார் சமூக செயற்பாட்டாளர்கள் என தமிழ்நாடு அளவிலும் உலக அளவிலும் சிறந்து விளங்குகிறவர்களை இந்தக் குழுக்களிலே இணைத்தார்.

நிதி & மேலாண்மை & பொருளாதாரம் & வரலாறு & மரபு & தொலைநோக்கு என பல்நோக்கு அறிவு கொண்ட ஆளுமையாளர்களை நிதி & தொழில் துறைகளின் அமைச்சர்களாக பணியமர்த்தினார். தமிழ்நாட்டை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து நமது நிலை, சிக்கல், தேவை, தீர்வு என அனைத்தும் அறிந்தவர்களாக நமது அமைச்சர்களும், ஆலோசனைக் குழுக்களும் திட்டங்களை வகுத்தார்கள். உலக வர்த்தக வரைபடத்தில் ‘தமிழ்நாடு’ தனித்த அடையாளத்தோடு, சுயசார்போடு, சுயமரியாதையோடு தனித்தியங்கும் ஆற்றலோடு தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் தொழில் வர்த்தகத் துறைகளில் உலக நாடுகளுக்கு இணையான உயரத்தை எட்ட வேண்டும் என்கிற இலட்சியங்களைக் கலைஞரின் வழிநின்று பதினாறடி பாய்ச்சலில் செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர். இதை ஓங்கி முழங்குகிற முழக்கம்தான் ‘மேட் இன் தமிழ்நாடு’ இது வெறும் முழக்கமல்ல... நமது முதல்வரின் நோக்கம்! ஆசை! கனவு! லட்சியம்! முடிந்தது அடிமையிருள்... விடிந்தது தமிழ்நாடு!

நன்றி - ’தொழில் நண்பன்’ மாத இதழ்

Related Stories

Related Stories