திமுக அரசு

”இசையமைப்பாளரை போல செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தினத்தந்தி நாளேடு தலையங்கம் - ஏன் தெரியுமா?

தேர்தல் பிரசாரத்தில் இருந்து எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தும் பாங்கு போற்றுதலுக்குரியதாக இருக்கிறது.

”இசையமைப்பாளரை போல செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தினத்தந்தி நாளேடு தலையங்கம் - ஏன் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தும் பாங்கு போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடத்தி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கண்காணிப்பேன் என்று முதல்வர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என‘தினத்தந்தி’ நாளேடு 4.10.2021 தேதியிட்ட இதழில் ‘அதிகாரிகளை மட்டுமல்ல; அமைச்சர்களையும் கண்காணிக்கும் மு.க.ஸ்டாலின்!’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:

"ஏற்கனவே துணை முதல்-அமைச்சர் அனுபவம் பெற்றிருந்தாலும், முதல் முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தில் இருந்து எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தும் பாங்கு போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அவர் அளித்தார். இதுதவிர, மாவட்டங்களில் பிரசாரம் செய்யும்போது, அந்தந்த மாவட்ட தேவைகள் தொடர்பாகவும் தனியாக வாக்குறுதிகளை அளித்தார். சட்டசபையிலும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக புதிய அறிவிப்புகளை 110-வது விதியின் கீழ் வெளியிட்டுவருகிறார். அந்த வகையில், 20 அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். “சொன்னதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன்” என்ற வகையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் காற்றிலே கலந்த கீதங்களாக கரைந்துவிடாமல், எல்லா அறிவிப்புகளையும், எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்காக மிக மும்முரமாக செயலாற்றி வருகிறார்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே முதல் ஆணையாக 5 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இப்போது அமைச்சரவை கூட்டம் என்றாலும் சரி, அதிகாரிகள் கூட்டம் என்றாலும் சரி, அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்தே பேசிவருகிறார். கடந்த மாதம் 11-ந் தேதி, ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தபோது, “சட்டமன்றத்தில் அறிவித்து ஒரு வார காலத்திற்குள்ளேயே இந்த திட்டத்தை செயல்படுத்திய அமைச்சர் சேகர்பாபுவை செயல்பாபு என்றுதான் அழைக்க வேண்டும்” என்று பாராட்டிய அவர், முதல் மெகா முகாமில் ஒரே நாளில் 28 லட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும், “சட்டமன்றத்தில் அறிவித்த எந்த அறிவிப்புகளும் வெறும் அறிவிப்போடு நின்றுவிடாது. அதை மாதந்தோறும் நானே கண்காணிப்பேன். அவ்வப்போது ஆய்வு கூட்டங்களை நடத்தி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே கண்காணிக்கப்போகிறேன்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த மாதம் அனைத்து துறை செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியபோதும், “தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், கவர்னர் உரை, பட்ஜெட், வேளாண் பட்ஜெட், 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் என்று, இவை அனைத்தையும் அரசாணைகளாக வெளியிட்டு உடனடியாக செயல்படுத்த வேண்டும். அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்ய 6 மாதங்கள்தான் இருக்கிறது. அதற்குள் அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்த வேண்டும். அமைச்சர்களை நேரடியாக கண்காணிக்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அமைச்சர்களை மட்டுமல்ல, ஒவ்வொரு துறை செயலாளரும், இந்த அறிவிப்புகளை குறித்த காலத்திற்குள் முடிக்கக்கூடிய வகையில் என்னுடைய கண்காணிப்பு இருக்கும்” என்பதை உறுதிபட தெரிவித்தார்.

மேலும், “அனைத்து துறைகளின் திட்டங்களின் செயல்பாடு குறித்த தகவல்களை நான் தெரிந்துகொள்ளும் வகையில், என்னுடைய அறையில் ‘ஆன்லைன்’ தகவல் பலகை ஒன்றை ஏற்படுத்தி, என் அறையிலேயே பெரிய திரை வைத்து ஒவ்வொரு நாளும் என்ன முன்னேற்றம்? என்பதை பார்க்கப்போகிறேன். அறிவிப்பு தொடர்பான அரசாணையை போட்டுவிட்டோம் என்பதால், அறிவிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அந்த அறிவிப்பின் பலன் மக்களை சென்றடையவேண்டும். அப்போதுதான் நாம் அறிவிப்பை செயல்படுத்திவிட்டோம் என்று அர்த்தமாகும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார். அதேபோல், “இந்த மாதம் மீண்டும் ஆய்வு நடத்த இருக்கிறேன்” என்பதையும் துறைச் செயலாளர்களிடம் தெளிவுபடுத்திவிட்டார்.

இசை நிகழ்ச்சிகளில் பலர் விதவிதமான இசை கருவிகளை மீட்டுவார்கள். அதில் இசையமைப்பாளர் கண்டக்டர் என்ற அளவில், கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு இசைக்கருவியை மீட்டுபவருக்கும் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருப்பார். அதுபோல, முதல்-அமைச்சரும், அதிகாரிகள், அமைச்சர்களை வேகப்படுத்த ஆய்வு கூட்டங்கள், உத்தரவுகள் வழியாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்பதே பொதுவான பார்வையாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories