திமுக அரசு

“தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே EVM வாக்குகளை எண்ண வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி MP வலியுறுத்தல்!

தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

“தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே EVM வாக்குகளை எண்ண வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி MP வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆகியோருக்கு அனுப்பிய மனுவின் தமிழாக்கம் வருமாறு:

1. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கட்சி முகவர்கள், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளுக்கு இணங்க, வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடித்து, முடிவுகளை அறிவித்த பின்னரே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஆனால், கையேட்டில் குறிப்பிட்டுள்ள இந்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளதாக அறிகிறோம்.

2. ஒவ்வொரு 500 தபால் வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேசை அமைக்க வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நடவடிக்கை, எங்கள் அச்சத்தைப் போக்கி, சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்யும் என நம்பினோம். மேலும், அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட்டோர் கரோனா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தையும் இந்நடவடிக்கை குறைக்கும். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் இல்லாமல், தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பைக் குறைக்க வாக்கு எண்ணும் மேசைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என 20.04.2021 அன்று எழுதிய கடிதத்தில் எழுதியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

3. ஆனால், 500 தபால் வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேசை அமைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு மாநிலம் முழுவதிலுமுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இணங்கவில்லை. சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மேசையிலேயே ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்திற்கு 500 தபால் வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமான தேர்தலை உறுதி செய்யாது. சென்னை மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் எண்ணப்படும்போது அதிக நேரம் எடுக்கும். இதனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணக் காலதாமதமாகும்.

4. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்போதுதான் தபால் வாக்குகளின் முடிவுகளும் அறிவிக்கப்படும் என, விருதுநகர் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். இது, நியாயமான மற்றும் நேர்மையான வாக்கு எண்ணிக்கை குறித்த எங்கள் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

5. இதன்மூலம், தபால் வாக்குகளை எண்ணுவதில் மாநிலத்தில் உள்ள பல்வேறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெவ்வேறு முறைகளைக் கையாள்வதாகத் தெரிகிறது. இது தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும்.

6. எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தெளிவான உத்தரவை வழங்க வேண்டும். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை அமைக்க வேண்டும் எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் முடிவுகளுக்காக காத்திராமல், தபால் வாக்கு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும்.”

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories